தட்பவெப்ப மாற்றத்தின் வெளிப்பாடாக பறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கான எச்சரிக்கை மணியாக உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
எல்லைகோடுகளைக் கடந்து கண்டங்கள் பல தாண்டி பறந்து சென்று தனக்கு ஏற்ற தட்ப வெப்ப நிலையில் வாழும் இயற்கையின் அற்புத படைப்பு தான் பறவைகள். குளிர் பிரதேசங்களில் வாழும் பறவைகள் பல இனப்பெருக்கத்திற்காக வெப்ப மண்டலங்களை தேடிச் செல்வது வழக்கம்.
அந்த வகையில் தமிழகத்தின் வேடந்தாங்கல், கோடியக்கரை மற்றும் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை போன்ற பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் ஏராளமான அளவில் ஆண்டு தோறும் வந்து செல்கின்றன. ஆனால், அண்மைக் காலமாக இங்கு வரும் பறவை இனங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டங்கள் விட்டு கண்டம் வரும் பறவைகள் பாலைவனங்களை கடக்க நேரிடும்போது அதன் அதிக வெப்பம் அவைகளின் தகவமைப்பிற்கு ஏற்ற அளவில் இல்லாமல் போயிவிட்டதாகக் கூறுகின்றனர் ஆராய்சியாளர்கள். காலம் காலமாக முட்டையிடுவதற்காக பயன்பட்டு வந்த இடங்கள் தற்போது இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளை இழந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தட்ப வெப்ப மாற்றத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க முயற்சி செய்யாவிட்டால் இன்று பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விரைவில் மனிதர்களுக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சி வல்லுனர்கள்.
-பசுமை நாயகன்