சென்னையில் பேருந்து தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்து தினத்தை கொண்டாட அனுமதித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
பேருந்து தின கொண்டாட்டம் தொடர்பான பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதிபதி கே. வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவில், இரு தினங்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்து தினத்தை கொண்டாடியதாகவும், உயர்நீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ள நிலையில், காவல்துறையினர் எவ்வாறு இதற்கு அனுமதி வழங்கினர் என்று கேட்கப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாணவர்களுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக காவல்துறையினர் 2 வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
பேருந்து தின கொண்டாட்டங்கள் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதால் அதற்கு தடை விதிக்க கூறி, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நேதாஜி போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் பொது நல வழக்கு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பேருந்து தினத்தை கொண்டாட தடை விதித்தது.
-பசுமை நாயகன்