Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

கச்சத்தீவு மற்றும் அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயம்



    கச்சத்தீவு மற்றும் அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயம் குறித்த புவியியல் மற்றும் வரலாற்றுத் தகவல்கள் பின்வருமாறு:-
  பாக் நீரிணைப் பகுதியில் உள்ள  கச்சத்தீவு, இலங்கையின் நெடுந்தீவிலிருந்து பத்தரை மைல் தெற்கே அமைந்துள்ளது. (தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலையில் அமைந்துள்ளது. இந்த தீவின் பரப்பளவு 285 ஏக்கர்.
  1974 மற்றும் 1976 ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்களை அடுத்து, கச்சத்தீவை இந்தியா, இலங்கை வசம் ஒப்படைத்தது. ஆனால், 1920 ஆம் வருட வாக்கிலிருந்து தொடங்கி கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சை இரு நாடுகளிடையே இருந்து வந்தது.
  இந்த தீவை மீண்டும் இந்தியா வசம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
  இங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயம் என்ற கத்தோலிக்க தேவாலயத்தினை 20-ம் நூற்றாண்டில் ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சீனிக்குப்பன் படையாச்சி என்பவர் நிர்மாணித்தார். இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும்.
  இதில், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்வர். ஆனால், 1983 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியதை அடுத்து, இந்த திருவிழா கொண்டாடப்படுவது நிறுத்தப்பட்டது.
  பின்னர், கடந்த 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, 2010 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. நான்காவது ஆண்டாக, இந்த ஆண்டும் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு காரணம், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததே என்ற கருத்து தமிழக அரசியல் கட்சிகளால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள்:-
  இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை, கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. இதற்கு வரலாற்று ஆவணங்கள் பல உள்ளன.
  இந்நிலையில், 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு, ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த கச்சத்தீவு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
  1974 ஆம் ஆண்டு, இந்தியா இலங்கைக்கு இடையில் உள்ள பாக் ஜலசந்தி கடல் பகுதியில் எல்லை வகுப்பதில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதனடிப்படையில், கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது.
  அதற்கு முன்பு வரை, இந்திய இலங்கை மீனவர்கள், பாக் ஜலசந்தி பகுதியில் ஒன்றாக இணைந்தே மீன் பிடித்து வந்தனர். கச்சத்தீவு பகுதியை தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் பயன்படுத்தியுள்ளனர். 1974 ஆம் ஆண்டு இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தவும் ஓய்வடுக்கவும் பயன்படுத்தலாம் என்று உரிமைகள் வழங்கப்பட்டன.
  மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடா ஆகிய இரு கடல் பகுதிகளிலும் கடல் எல்லையை வகுக்க 1976 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  இந்த ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. 1976 ஆண்டு ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, தமிழக மீனவர்கள் எல்லை மீறியதாக கூறி, 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் முறையாக தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
  அதன் பின் தொடர்ச்சியாக, தற்போது வரை 350-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
  1976 ஆம் ஆண்டின் ஒப்பந்த அடிப்படையில் எல்லை தாண்டி வருவதாக கூறி இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், தமிழக மீனவர்களோ, 1974-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் கச்சத்தீவில் தங்களுக்கு இருக்கும் வரலாற்று உரிமைகளின் அடிப்படையில் கச்சத்தீவைப் பயன்படுத்தி வருகின்றனர்.
  இலங்கை எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது. இந்த விவகாரத்தில், மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்வுகளாக மீனவர்கள் முன்வைக்கும் சில யோசனைகள் பின்வருமாறு:-
  எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்வுகளாக சிலவற்றை முன்வைக்கின்றனர் இந்திய இலங்கை நிரபராதி மீனவ கூட்டமைப்பினர்.
  இந்த விவகாரத்திற்கு தீர்வாக, ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடித் துறைமுகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதம்பாலத்தில் படகு செல்லும் வகையில் துவாரம் அமைத்து மன்னார் பகுதியில் மீன்பிடிக்க உதவ வேண்டும். ஆழ்கடல் மீன்பிடித்தளம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  கடந்த ஆண்டு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சியால் இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.
  இந்நிலையில், இந்த ஆண்டும் இது போல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அதற்கு தாங்கள் ஒத்துழைக்க போவதில்லை என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING