யோகா குரு பாபா ராம்தேவ் மேற்கொண்ட நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் டில்லி காவல்துறையினரால் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. பாபா ராம்தேவ் கைது செய்யப்பட்டார்.
கறுப்புப்பணத்தை மீட்க கோரியும் ஊழலை ஒழிக்க வலியுறுத்தியும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மூன்று நாள் உண்ணாவிரதம் தொடங்கிய யோகா குரு பாபா ராம்தேவ், மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வராததையடுத்து, இன்று ஐந்தாவது நாளாக உண்ணாவிரதத்தை நீடித்துள்ளார்.
தனது போராட்டத்தை சற்றும் கண்டு கொள்ளாத மத்திய அரசை திரும்பிப் பார்க்க வைக்கும் முயற்சியில், நாடாளுமன்றத்தை நோக்கி தனது ஆதரவாளர்களுடன் பேரணியை மேற்கொண்டார். நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்திருந்ததால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் சலசலப்புகளை தவிர்க்க ராம்தேவ் போராட்டத்தை பாதியிலேயே தடுத்த நிறுத்த காவல்துறை முடிவு செய்தது.
இதன்படி பாபா ராம்தேவும் அவரது ஆதரவாளர்களும் ரஞ்சித் சிங் மேம்பாலம் அருகே சென்ற போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கேயே வாகனத்தின் இருந்தவாறு உரையாற்ற பாபா ராம்தேவ் தயாரான போது, அவரை கோவல்துறையினர் கைது செய்ததனர்.
பாதை மாறிய போராட்டம் ?! கறுப்புப்பணத்தை மீட்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோஷங்களை காட்டிலும் காங்கிரஸ் கட்சியை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கும் பேச்சுக்களே ராம்லீலா மைதானத்தில் மேலோங்கி நிற்பதால் ராம்தேவ் நடத்தி வரும் போராட்டம் காங்கிஸ் கட்சிக்கு எதிரான போராட்டம் என்ற விமர்சனைக்கு உள்ளாகியுள்ளது.
ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார். டில்லி ராம்லீலா மைதானத்தில் உரையாற்றிய சுப்பிரமணிய சுவாமி வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அவரைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்காரி, ராம் லீலா மைதானத்திற்கு வந்து ராம்தேவுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ஏற்கெனவே வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கப்போவதாகவும், அதற்காக மக்களை தயார் படுத்தப்போவதாகவும் ராம்தேவ் தெரிவித்திருந்தார். இதனால் ராம்தேவ் போராட்டம் பாதை மாறிச் செல்வதாக கருத்துக்கள் நிலவுகின்றன.
-இணைய செய்தியாளர் - சத்திஸ்