இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து
கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ மற்றும் அவரது ஆதரவாளர்களை மத்திய பிரதேச
எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ராஜபக்சேவுக்கு கறுப்புக்
கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மற்றும் அவரது கட்சியினர்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு
பேருந்துகளில் சென்றனர். இவர்கள் மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள பந்துர்னா
என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து, மதிமுகவினர் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் நாளை நடைபெறும் சர்வதேச புத்த
பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்ள
இருக்கிறார். இதற்காக இந்தியா வந்துள்ள அவர், குடியரசுத் தலைவர் பிரணப்
முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள்
குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
-பசுமை நாயகன்