காவிரி நிலவரம் குறித்து ஆய்வு செய்ய, இன்று சென்னை வந்த மத்திய குழு,
தமிழக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியை சந்தித்து ஆலோசனை
நடத்தியது.
மத்திய நீர்வளத் துறை செயலாளர் துருவ் விஜய் சிங் தலைமையில் நீர்வளத்
துறை அதிகாரிகள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை
செயலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழகத்தின் பயிர் பரப்பளவு
எவ்வளவு, நீர் எவ்வளவு தேவை போன்ற விவரங்களை மத்திய குழுவினர்
சேகரித்தனர்.
இதையடுத்து, மாலை பெங்களூருவுக்கு டி.வி.சிங் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு, கர்நாடகா அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் நாளை பேச்சுவார்த்தை
நடத்துகின்றனர். தமிழகத்தின் நீர் தேவை குறித்து அப்போது, கர்நாடகாவுக்கு
எடுத்துக் கூற உள்ளனர். அதேநேரத்தில், காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய
குழுவினர் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர். பயிர்களின் நிலைமை, நீர் தேவை
குறித்து அறிக்கை தயாரிக்க உள்ளனர். இதன்பின், நான்கு நாட்களில் இந்த
குழுவினர் அறிக்கை தயார் செய்து, மத்திய நீர்வள அமைச்சகத்திடம் வழங்க
உள்ளனர்.
அக்டோபர் 15ம் தேதிக்கு பின் நடைபெறும், காவிரி கண்காணிப்புக் குழு
கூட்டத்தின் போது, இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதனடிப்படையில் விவாதம்
நடத்தப்படும். அக்டோபர் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் 9 ஆயிரம் கன
அடி தண்ணீர் திறந்துவிட, காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், அதன்பின்
தமிழகத்துக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது குறித்து, காவிரி
கண்காணிப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். -பசுமை நாயகன்.