2ஜி முறைகேடு தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள
அனைத்து வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஐ., தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி
ஜி.எஸ்.சிங்வி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று
விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஆண்டு ஏப்ரலில், 2ஜி முறைகேடு
தொடர்பான மனுக்கள் மீது, உச்சநீதிமன்றத்தை தவிர வேறு எந்த நீதிமன்றமும்
விசாரணை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்ததை சிபிஐ வழக்கறிஞர்
சுட்டிக்காட்டினார்.
2ஜி வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 20 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சிபிஐ.,
தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்குகளின் விசாரணைக்கு
தடை விதித்த நீதிபதிகள், இது குறித்து 6 வாரத்திற்குள்
விளக்கமளிக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு உத்தரவிட்டனர்.
மத்திய அமைச்சர் ஆ ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள்
நிர்வாக இயக்குநர் சரத் குமார் ஆகியோரின் மனுக்கள் நிலுவையிலுள்ளன.
-பசுமை நாயகன்