உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட 122 அலைக்கற்றை உரிமங்களுக்கான
ஏலம் டெல்லியில் இன்று காலை தொடங்கி இதுவரை நான்கு சுற்றுகள்
முடிவடைந்துள்ளன.
டெல்லி, மும்பை, ராஜஸ்தான், கர்நாடக ஆகிய தொலைத்தொடர்பு வட்டங்களில்
ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை. குஜராத் மற்றும் உத்தரப்
பிரதேச கிழக்கு தொலைத்தொடர்பு வட்டத்தை ஏலத்தில் எடுக்கவே போட்டி இருந்ததாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்தி ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, வீடியோகான், டெலிநார் ஆகிய 5
நிறுவனங்கள் மட்டுமே இந்த 2 ஜி ஏலத்தில் பங்கேற்றுள்ளன. மேலும், ஜிஎஸ்எம்
முறையிலான சேவைக்கு பல பிராந்தியங்களில் அலைகற்றை ஒதுக்கீடு ஏலத்தில் எந்த
நிறுவனங்களும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
5 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை அளவுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்தபட்ச
விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 2.5 மெகா ஹெர்ட்ஸ் அளவிற்கு மேல்
அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கூடுதலாக
கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடும்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் கடந்த 2008-ல் தனியார்
நிறுவனங்கள் செலுத்திய தொகையை விட 7 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய காரணங்களால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் ஆர்வம்
காட்டவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஜிஎஸ்எம் சேவையில் 5 நிறுவனங்கள்
பங்கேற்றுள்ள நிலையில் சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் அலைக்கற்றை சேவை பெற
எந்த நிறுவனமும் முன்வரவில்லை.
இதனால், மத்திய அரசு எதிர்பார்த்தபடி சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்
வருவாய் கிடைக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இந்தியாவில் அலைக்கற்றை
ஒதுக்கீடு சேவை 22 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்றைய ஏலத்தில் 2ஜி
முறைகேடு சர்ச்சையில் சிக்கிய ஸ்வான் டெலிகாம், லூப் டெலிகாம் ஆகிய
நிறுவனங்கள் கலந்துகொள்ளவில்லை. இந்த ஏலம் இன்று இரவு 7.30 மணி வரை
நடைபெறும்.
-பசுமை நாயகன்