நீலம் புயலைத் தொடர்ந்து மேலும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது.
இதன்படி கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம், தீவிர
காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
அறிவித்துள்ளது.
சென்னைக்கு கிழக்கே ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலும்,
விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 650 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த காற்றழுத்த
மண்டலம் நிலைகொண்டுள்ளது. இது புயலாக மாறும் என எச்சரித்துள்ள வானிலை
ஆய்வு மையம், காற்றழுத்த தாழ்வு மண்டலம், முதலில் வடமேற்கு திசையிலும்
பின்னர் தென்மேற்கு திசையிலும் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை
நோக்கி நகரும் என கூறியுள்ளது.
இதன்காரணமாக அந்தமான் நிகோபர் தீவுப் பகுதிகளில் அடுத்த 48
மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்றும் மணிக்கு 65 முதல் 85 கிலோமீட்டர்
வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில்
வங்கக் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு
இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புதிய புயல் சின்னம் காரணமாக ஆந்திர மாநிலத்திலுள்ள அனைத்து துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-பசுமை நாயகன்