விருந்து மூலம் பாரதிய ஜனதா கட்சியை சமாதானப்படுத்தும் பிரதமரின்
முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கும் நிலை
ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுக்கு பிரதமர்
மன்மோகன் சிங் நேற்றிரவு விருந்து அளித்தார்.
அதில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் அத்வானி, மக்களவை
எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
அருண் ஜெட்லி ஆகியோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்
நாத், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரும் விருந்தில் கலந்து
கொண்டனர்.
விருந்தின் மூலம், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு
எதிர்ப்பு தெரிவித்து வரும் பாரதிய ஜனதாவை சமாதானப்படுத்தும் முயற்சி
தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய
விவாதம் நடத்த வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
உறுதியாக உள்ளன. இதனால், நாடாளுமன்றம் இன்று கூடும் போதும், அமளியால்
ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.