கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை
இன்று ராஜினாமா செய்கிறார். பெங்களூரு சுதந்திர பூங்காவில் தனது
ஆதரவாளர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றிய பின் அவர்களுடன் பேரணியாக
விதான்சவுதா ( கர்நாடகா சட்டசபை) செல்லும் எடியூரப்பா, சபாநாயகர்
போப்பையாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்குகிறார்.
2008 சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ.கட்சி வெற்றி பெற்றது.
எடியூரப்பா ஷிகாரிபுரா சட்டசபையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தென்
இந்தியாவில் பா.ஜ., ஆட்சி மலர வித்திட்டவர் என்ற பெருமையை பெற்றார்
எடியூரப்பா. கர்நாடக மாநில விவசாயிகள் மத்தியில் எடியூரப்பாவுக்கு அமோக
ஆதரவு திரண்டது காரணம் ஓகேனக்கல் பிரச்னையில் எடியூரப்பாவின் நிலைப்பாடு.
இந்நிலையில் சுரங்க முறைகேட்டு விவகாரத்தில் சிக்கினார் எடியூரப்பா.
எடியூரப்பா அரசியல் வாழ்க்கையில் பெரும் புயலாக கிளம்பிய சுரங்க முறைகேடு
விவகாரம் அவரது முதல்வர் பதவியை பறித்தது. கட்சி மேலிடத்தின்
நெருக்கடியால், கடந்த ஜூலை31ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்
எடியூரப்பா.
சில நாட்கள் சிறைவாசம், பதவி பறிபோன சோகம் என இருந்த எடியூரப்பா
மீண்டும் முதல்வர் பதவி கோரி போர்க்கொடி தூக்கினார். ஆனால் பா.ஜ., மேலிடம்
அதனை பொருட்படுத்தவில்லை. கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் பதவி அவரது அடுத்த
இலக்காக இருந்தது. ஆனால் அந்த கனவும் பலிக்கவில்லை.
இந்நிலையில் அதிருப்தி தெரிவித்த எடியூரப்பா பா.ஜ.வில் இருந்து
விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து அருண்ஜெய்ட்லி உள்ளிட்ட பா.ஜ., மூத்த
தலைவர்கள் எடியூரப்பாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால்
அந்த முயற்சி தோல்வியடைந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா
செய்கிறார். தொடர்ந்து பா.ஜ., கட்சி அடிப்படை உறுப்பிவனர் பதவியையும் அவர்
ராஜினார் செய்வார் என தெரிகிறது.
டிசம்பர் 9ல் புதிய கட்சி : கர்நாடக ஜனதா கட்சி என்ற
புதிய கட்சியை வருகிற டிசம்பர் 9ம் தேதியன்று துவங்க இருப்பதாக எடியூரப்பா
அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹவேலியில் புதிய கட்சியை தொடங்க
இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
-பசுமை நாயகன்