கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமியின் கோர தாண்டவத்தை
யாராலும் மறந்திருக்க முடியாது. சுனாமி விட்டுச் சென்ற துயரமும், மக்களின்
ஓலமும் காலங்கள் கடந்தாலும் இன்னமும் நம் மனதில் சோகங்களைச் சுமந்து
ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம்
தேதி இதே நாள் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில்
9.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமியால்
இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தாய்லந்து உள்ளிட்ட 14 நாடுகளில் மொத்தம்
இரண்டு லட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்த
சுனாமியால், இந்தோனேஷியா தீவு உருக்குலைந்து போனது. அங்கு, சுமார், ஒரு
லட்சத்து முப்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும்,
முப்பதேழாயிரம் பேரைக் காணவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.
இந்தோனேஷியாவிற்கு அடுத்தபடியாக, இலங்கையில் பெரும் இழப்பு ஏற்பட்டது.
இலங்கையில், முப்பத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்களைப்
பறித்துச் சென்றது சுனாமி.
சுனாமியால் 12 ஆயிரம் பேர் பலி: சுமார் 30 மீட்டர் உயரத்துக்கு மேல்
எழுந்த சுனாமியால், இந்தியாவில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்
உயிரிழந்தனர். ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக மக்கள் காணாமல் போனதாகவும் ஆறு
லட்சத்து நாற்பத்து ஏழாயிரம் பேர் தங்களின் உடமைகளை இழந்ததாகவும் புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன.இதில் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 13
மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது. கடற்கரையை ஒட்டியுள்ள சுமார்,
418 பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின. அங்கு வசித்த, எட்டாயிரம் பேர்
உயிரிழந்தனர். சுமார், பத்தாயிரத்திற்கும் அதிகமாக மக்கள் தங்களின் உடமைகளை
இழந்து தவித்தனர். இந்த சுனாமி தாக்குதலில், காணாமல் போன 846 பேரின் நிலை
என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.
வரலாற்றிலேயே மூன்றாவது மிகப்பெரிய நிலநடுக்கமும் சுனாமியும் இது
என்கின்றனர் ஆய்வாளர்கள். சுனாமி ஏற்பட்ட தினம் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி
இருந்ததாலும் அன்று ஞாயிறு காலை என்பதால் கடற்கரைக்கு வந்த மக்கள்
கூட்டத்தின் அளவு குறைவாக இருந்தது. இதனால், கூடுதலான உயிரிழப்பு
தவிர்க்கப்பட்டன. எது எப்படியோ, தண்ணீரால் அலைக்கழிக்கப்பட்டு கண்ணீரில்
முடிந்த சோக கதையை யாராலும் மறக்க முடியாது.
-பசுமை நாயகன்