வால்மார்ட் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த
வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக ஏற்பட்ட
அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பல முறை ஒத்தி வைக்கப்பட்டன.
இதனிடையே, விசாரணை நடத்த தயார் என்று மத்திய அரசுத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், என்ன மாதிரியான விசாரணை என்பது குறித்து
எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை
நடத்தினார்.
அப்போது, அமைச்சர்கள் ப.சிதம்பரம், கமல்நாத் உள்ளிட்டோரும் உடன்
இருந்தனர். இந்த சந்திப்பின் போது, இந்தியாவில் கால் ஊன்ற வால்மார்ட்
நிறுவனம் பணம் செலவழித்தது தொடர்பாக விசாரணை நடத்தலாம் என்று முடிவு
எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, எஸ்சி, எஸ்டி பதவி உயர்வில்
இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரும்
பிரச்னை எழுப்பியதாலும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. முடிவில், இரு
அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக, அதிமுக, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய
ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த
கோரிக்கை விடுத்தன.
அமெரிக்கா மறுப்பு : இதற்கிடையில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்குவற்காக வால்மார்ட் நிறுவனம் விதிகளை மீறவில்லை என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்
தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட், வர்த்தகத்தை தொடங்குவதற்கான லாபி முறை
அமெரிக்கச் சட்டப்படி தவறல்ல என தெரிவித்துள்ளார்.
வால்மார்ட் நிறுவனம் அமெரிக்க சட்டப்படியே லாபி செய்து அதற்கான செலவு விவரத்தை அரசுக்கு அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் வால்மார்ட் நிறுவனம் அமெரிக்கச் சட்டத்தை மீறவில்லை
என தெளிவுபடுத்தியுள்ள விக்டோரியா, இந்தியாவில் ஏதேனும் விதிமீறல்
இருந்தால் அதுகுறித்து இந்திய அரசுதான் விசாரிக்க வேண்டும் என்றார்.
இதே போன்று தாங்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என மறுத்துள்ள
வால்மார்ட் நிறுவனம், 125 கோடி ரூபாய் செலவு என்பது அமெரிக்காவில் லாபி
செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட தொகை என விளக்கமளித்துள்ளது. சில்லரை
வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி
அளித்தது.
இந்த விவகாரத்தில் வால்மார்ட் நிறுவனம் லஞ்சம் வழங்கியிருப்பதாக பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
-பசுமை நாயகன்