மானாமதுரை அருகே என்கவுன்ட்டரில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட
வழக்கில் டிஜிபி, சிபிஐ இயக்குனர் உட்பட 9 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை அடுத்த மானாமதுரை அருகே என்கவுன்ட்டரில் இரண்டு பேர் சுட்டுக்
கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தக் கோரி சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் என்கவுன்டர் நடத்திய டி.எஸ்.பி.,வெள்ளைதுரை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 27ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர்
குருபூஜையின்போது அவர்கள்து உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பது தொடர்பாக
செல்லப்பாண்டியன் என்பவரது தரப்புக்கும், பிரபு தரப்பிற்கும் இடையே மோதல்
ஏற்பட்டது.
அப்போது செல்லப்பாண்டியனை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற பிரபுவை,
காவல்துறையினர் வழிமறித்தபோது, அவர் கத்தியால் குத்தியதில் காவல்துறை உதவி
ஆய்வாளர் ஆல்வின் சுதன் உயிரிழந்தார். இது தொடர்பாக பிரபுவும், பாரதி
என்பவரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட பிரபு, பாரதி ஆகியோர் விசாரணைக்காக அழைத்துச்
செல்லும் போது மானாமதுரை அருகே கடந்த 29ம் தேதியன்று என்கவுன்டரில்
சுட்டுக்கொல்லப்பட்டனர்.
போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் இருவரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக உயிரிழந்த பிரபு, பாரதி ஆகியோரின் பெற்றோர் சிபிஐ விசாரணை
கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், டிஜிபி, சிபிஐ
இயக்குனர் உட்பட 9 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது குறித்து உள்துறைச் செயலாளரும் 4 வாரங்களுக்குள்
பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த வழக்கை ஜனவரி 7 ம்
தேதிக்கு ஒத்திவைத்தது.
-பசுமை நாயகன்