இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதிலும் சுமார் 5 ஆயிரத்து 400 பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்கள் வாயிலாக ஏறக்குறைய 35 ஆயிரத்திற்கும் அதிகமான இடம்பெயர்ந்து வாழ்பவர்களின் குழந்தைகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பாலம், தொழிற்சாலை, நெடுஞ்சாலை, ரயில்வே பணிகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெறும் இடம், செங்கற்சூளை, நரிக்குறவர்கள், வேளாண் தொழிலாளர் வசிக்கும் இடம், மீன்பிடித் தொழிலுக்காக இடம்பெயர்ந்து வாழும் பகுதி, சாலையோர குடியிருப்புகள், வாத்து மற்றும் ஆடுமேய்ப்பவர்கள் மற்றும் இலங்கை அகதிகள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-பசுமை நாயகன்