தமிழ்நாடும் கர்நாடகமும் தங்கள் மாநிலங்களின் தற்போதைய தண்ணீர் இருப்பு
மற்றும் தேவை குறித்து அறிக்கை அளித்துள்ள நிலையில், தனது முடிவை
உச்சநீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் உச்சநீதிமன்ற
நீதிபதிகள், டி.கே. ஜெயின், மதன் பி. லோகூர் அடங்கிய அமர்வு தீர்ப்பினை
இன்று வழங்க உள்ளது. காவிரி டெல்டா பாசன விவசாயிகள் தண்ணீர் இன்றி தவித்து
வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர்
கே.வி. ராமலிங்கம், கர்னாடக அணைகளில் நீர் இருப்பு அதிகமாக உள்ளதாகவும்,
ஆனால் கர்னாடக அரசு அதனை குறைத்து காட்டி வருவதாகவும் குற்றம்
சாட்டியுள்ளார். எனினும் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று
நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 15 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள
சம்பா சாகுபடிக்கு குறைந்தபட்சம் 30 டிஎம்சி தண்ணீராவது வேண்டும், 15
நாட்களுக்குள் இதனை வழங்க கர்னாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட
வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
எனினும் தங்கள் அணைகளில் 37 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது என்றும் இதில்
28 டிஎம்சி தண்ணீர் குடிநீர் விநியோகத்திற்கு தேவை என்றும் மீதி
விவசாயத்திற்குத் தேவை என்றும் கர்னாடகம் உச்சநீதிமன்றத்தில் பதில்
அளித்துள்ளது.
-பசுமை நாயகன்