காவிரியில் கர்நாடகா 55 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் மத்திய நீர்வளத்துறை செயலாளர்
டி.வி.சிங் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக
தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், கர்நாடக தலைமைச் செயலர் ரங்கநாத்
உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஜனவரி மாதம் மட்டும் 18 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாகவும் மேலும்
நிலுவையில் உள்ள 37 டிஎம்சி நீரையும் சேர்த்து 55 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா
விடுவிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்தில் இருமாநில தண்ணீர் தேவை குறித்தும், தமிழகத்திற்கு கர்நாடக
அரசு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்தும் முடிவு எடுக்கப்பட உள்ளது.
முன்னதாக காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வரும் 11 ஆம்
தேதிக்குள் காவிரி கண்காணிப்புக் கூட்டத்தை கூட வேண்டும் என உத்தரவிட்டது.
அதன் பேரில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட தமிழகம் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.-பசுமை நாயகன்