டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மாணவியின் ஆண்
நண்பரிடம் பேட்டி கண்டு அதை ஒளிபரப்பியதற்காக தனியார் தொலைக்காட்சி
நிறுவனம் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாணவியை பலாத்காரம் செய்து, கடுமையாக தாக்கிய அந்த ஆறு பேர் கும்பல்,
அவரது ஆண் நண்பரான மாணவரையும் சரமாரியாக தாக்கியது. இதில், பலத்த காயம்
அடைந்த அவர், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த
நிலையில், அவரை தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டு ஒளிபரப்பியது.
இதில், தாங்கள் ஓடும் பேருந்தில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட
பின்னர், சுமார் 25 நிமிடங்கள் சாலையில் உயிருக்குப் போராடியதாகவும்,
பொதுமக்கள் யாரும் உதவ முன்வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இந்த வழக்கு எந்த
காவல்நிலைய எல்லைக்குள் வரும் என ஆலோசனை நடத்தியதாகவும் இதில் 45
நிமிடங்கள் விரயமானதாகவும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.காவல்துறையினரின்
அலட்சியமே இதுபோன்ற குற்றங்களுக்கு காரணம் என பொதுமக்கள் தரப்பில்
குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட அந்த மாணவர் இதுபோன்று
பேட்டி அளித்துள்ளார்.
மேலும், சாலை ஓரத்தில் நிர்வாணமாக விழுந்துகிடந்த எங்களை
காவல்துறையினர் வேடிக்கை பார்த்தனர். அப்போது, யாரோ ஒருவர் கொடுத்த துணியை
வைத்து எனது தோழியின் உடலை மறைக்க முயன்றேன். ஆம்புலன்ஸ் வேன் எதுவும் வராத
நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த எனது தோழியின் நிலை குறித்து மிகவும்
கவலை அடைந்தேன். பின்னர் நானே எனது தோழியை போலீஸ் வேனில் தூக்கி வைத்தேன்.
காவல்துறையினர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நீண்டதூரம்
பயணித்து சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
-பசுமை நாயகன்