கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட கொடிய குற்ற வழக்குகளைச் சந்திப்பவர்கள் தேர்தலில் போட்டியிட உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், இது தொடர்பாக 15 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அடுத்த தேர்தலுக்கு முன்பே இதனை அமல்படுத்த வேண்டுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "உடனடியாக அமல்படுத்த வேண்டும்" என்று பதிலளித்தார்.
குற்றவாளிகள் அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கும் குற்ற வழக்குகளில் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று 1998-ம் ஆண்டில் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.போலி வழக்குகளால் தேர்தலில் போட்டியிடும் உரிமை பறிக்கப்படலாம் என்பதால், தேர்தலு்ககு 6 மாதங்களுக்கு முந்தைய வழக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்தப் பரிந்துரையில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதுவரை இது தொடர்பாக எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. தற்போதுள்ள விதிகளின்படி ஒருவருக்கு இரண்டு ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது
.-பசுமை நாயகன்