நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி பொதுமக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சாதி வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் புதுப்பானையில் அரிசி இட்டு இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை பொங்கல் என்று தெரிவித்துள்ளார். உள்ள மகிழ்வோடு கொண்டாடும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், காவிரி நீர் கிடைக்காமலும், பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் கிடைக்காமலும் தமிழக விவசாயிகள் வேதனையில் மூழ்கி உள்ளனர் என்றும் புலரும் புத்தாண்டு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திட வாழ்த்துவதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற அடிப்படையில், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கும் டெல்டா விவசாயிகளின் துயர் தீரவும், தமிழக மக்கள் வாழ்வுயரவும் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காரிருளுக்குப் பிறகு வெளிச்சம் உதிக்கும் என்ற நியதின் படி தை பிறந்து விட்டது என்றும், இனியாவது நமக்கு ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழ்ப் பெருமக்கள் இப்பொங்கலை கொண்டாடட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
.-பசுமை நாயகன்