ரயில்களுக்கான கட்டண உயர்வு நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் சிறப்பு கவுன்டர்கள் மூலம் கூடுதல் கட்டணத் தொகையை செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ரயில்களுக்கான கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணச்சீட்டுகளுக்கான கூடுதல் கட்டணத்தை அதற்காக ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்ட்டர்கள் மூலம் செலுத்தி பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு செலுத்த இயலாதவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் கூடுதல் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் ரயில்வேத்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.
புதிய கட்டண உயர்வுப் படி, சென்னையில் இருந்து மதுரைக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கான கட்டணம் 30 ரூபாய் உயர்ந்து 262 ரூபாயாக உள்ளது. 3ஆம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கான கட்டணம் 49 ரூபாய் அதிகரித்து 665 ஆக இருக்கிறது. 2ம் வகுப்பு ஏ.சி கட்டணம் 30 ரூபாய் உயர்ந்து 1065 ரூபாயாக உள்ளது.
சென்னையில் திருச்சிக்கு 2ம் வகுப்பு படுக்கை வசதி பயணக்கட்டணம் 24 ரூபாய் அதிகரித்து 188 ரூபாயாக இருக்கிறது. 3ஆம் வகுப்பு ஏ.சி பயணச் சீட்டு 40 ரூபாய் உயர்ந்து 486 ரூபாயாக உள்ளது. 2ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கான கட்டணம் 24 ரூபாய் அதிகரித்து 719ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவைக்கான இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பயணக்கட்டணம் 30 ரூபாய் உயர்ந்து 262 ரூபாயாக இருக்கிறது. 3ஆம் வகுப்பு ஏ.சி பயணக்கட்டணம் 49 ரூபாய் அதிகரித்து 665 ரூபாயாக உள்ளது.2ம் வகுப்பு ஏ.சி பெட்டி பயணக்கட்டணம் 30 ரூபாய் உயர்த்தப்பட்டு 1065 ரூபாயாக உள்ளது. இதேபோன்று சென்னையில் இருந்து நெல்லைக்கு 2ம் வகுப்பு படுக்கை வசதி பயணக்கட்டணம் 39 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 321 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3ஆம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கான பயணக்கட்டணம் 65 ரூபாய் அதிகரித்து 798 ரூபாயாக இருக்கிறது. 2ம் வகுப்பு ஏ.சி பெட்டி பயணக்கட்டணம் 40 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத பெட்டிக்கான பயணக்கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இனி குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பின் 10 ரூபாய், 15 ரூபாய் என்ற முறையில் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர்கள் இன்று இரண்டு முறை வெளிநடப்பு செய்தனர். மக்கள் பிரச்னை சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்பதற்கு அனுமதி வழங்கவில்லை என குற்றம்சாட்டி மாமன்ற கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் திமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
மீண்டும் கூட்டத்திற்கு அவர்கள் வந்த போது, அண்ணா வளைவு குறித்து அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சைதாப்பேட்டையில் திமுக தலைவர் கருணாநிதி பெயரில் உள்ள வளைவை அகற்ற வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர்.
இதனை கண்டித்து திமுக உறுப்பினர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்தனர்..
-----------------------------------------------------------------
உன்னால் முடியும் தம்பி என்று உணர்த்திய எம்.எஸ்.உதயமூர்த்தி காலமானார்
உன்னால் முடியும் தம்பி என்று ஏராளமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்த டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி காலமானார்.
சமீப காலமாக உடலநலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது உயிர் இன்று பிரிந்தது.
தமிழில் சுயமுன்னேற்ற நூல் என்று கேள்விப்படாத அந்த நாட்களிலேயே இவரது நூல்கள் பல மனங்களில் ஒளி பாய்ச்சி சரித்திரம் படைத்தன.
--------------------------------------------------------------
தமிழகத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட முகமது ரபீக்கை,பிடிக்க 2 தனிப்படை
தமிழகத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட முகமது ரபீக்கை,பிடிக்க 2 தனிப்படை
தமிழகத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வடமாநில கும்பலின் தலைவன் முகமது ரபீக்கை, 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரிடமிருந்து தப்பியோடும் போது பலத்த காயம் ஏற்பட்டதால் ரஃபீக் மருத்துவமனையில் சிகிச்சை பெற வரலாம் என்பதால் அனைத்து மருத்துவமனைகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன் வியாசர்பாடி எருக்கஞ்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சோதனை நடத்திய மகாகவி பாரதி நகர் காவல்துறையினர், ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். மேலும், ஒரு கார் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, நேற்றிரவு கிழக்கு தாம்பரத்தில் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை மாற்ற முயன்றுள்ளார். அது கள்ளநோட்டு என்பதை அறிந்த கடை உரிமையாளர் போலீசாருக்கு தகவலளித்தார். அதனை தொடர்ந்து, அவரிடமிருந்து 24 ஐநூறு ரூபாய் தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த அகமது ஹமீத் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள ரஃபீக்கும், ஹமீதுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-பசுமை நாயகன்