குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணிநியமன ஆணை வழங்கப்படும் டி என் பி எஸ் பி தலைவர் நட்ராஜ் அறிவிப்பு
கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு சென்னையில் இன்று நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்பி தலைவர் நட்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகளுக்கான கால அட்டவணை வரும் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தட்டச்சர், நில அளவையர் பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வில், இந்த ஆண்டிற்கான 866 பணியிடங்கள் தேர்வு செய்யப்படாத நிலையில், மொத்தம் 450 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
எஞ்சிய பணியிடங்களுக்கான அடுத்த கட்ட கலந்தாய்வு வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 870 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது.
சுமார் 10 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
------------------------------------------------------------------------
கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி சென்னையில் பல்வேறு மீனவர் சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. கடலோர பகுதிகளிலிருந்து மீனவர்களை வெளியேற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மீனவர்களை வெளியேற்றவே கடலோரத்தில் அணு உலை மற்றும் பெரிய தொழிற்சாலைகளை அரசு நிறுவி வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21ஆம் தேதி அணுமின் எதிர்ப்பு தினம் மீனவர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
1987ஆம் ஆண்டு தொடங்கிய இந்த போராட்டம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நாடு முழுவதும் 10 கடலோர மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையிலும், மெமோரியல் ஹாலில் இந்த போராட்டம் நடைபெற்றது.
அதில் பல மீனவசங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனர்.
-பசுமை நாயகன்