சென்னை நீங்கலாக தமிழகத்தின் 31 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
காவிரி பாசனப் பகுதிகளில் 50 சதவிகிதத்திற்கு மேல் பயிர் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அந்த மாவட்டங்களில் விவசாயிகளுக்கான நிலவரி முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாட்களுக்கான வேலை, 150 நாட்களாக உயர்த்தப்படுவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவைமட்டுமின்றி, விவசாயிகள் தங்களின் கூட்டுறவு கடன்களை திரும்பச் செலுத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, அக்கடன்களை திருத்தி அமைக்கவும் அரசின் இந்த உத்தரவு வழி வகுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பருவ மழை குறைவாக பெய்தது, காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்காதது, கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-பசுமை நாயகன்