காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வரும் 20-ந் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் தற்போதைய பயிர் நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய நீர்பாசனத் துறை அதிகாரிகள் இடம் பெறும் இந்தக் குழு, 3 மாவட்டங்களில் உடனடியாக ஆய்வு செய்து நாளை மறுநாள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தவிர, சம்பா பயிர்களை பாதுகாக்க, மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு 2 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பின்னர் திறந்து விடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை இதுவரை வெளியிடாதது ஏன் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.