மரண தண்டனைக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு தரப்பில் இருந்தும் பல குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இன்றைய சமூகத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் தமிழ் சினிமாவின், பல்வேறு காலகட்டங்களில், மரண தண்டனையை தொடர்பு படுத்திய படங்கள் வெளிவந்துள்ளன.
முழுமையாக இல்லாவிட்டாலும், தமிழ் சினிமா தன் வகையில் பதிவு செய்த மரண தண்டனை குறித்த படைப்புகள் சில, இருக்கவே செய்கின்றன.
*மரபுகள் பல மாறுவதற்கு முன்பே மக்கள் சமுதாயத்தில் கடுமையான தண்டனைகள் பல இருந்து வந்தன. குழுக்களாக காடுகளில் மக்கள் வாழ்ந்த போது, தங்கள் இன நெறிமுறைகளை மீறுவோருக்கு மூன்று விதமான தண்டனைகள் வழங்கப்பட்டிருப்பதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. தங்கள் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்தல், ஆயுதம் கொண்டு குற்றவாளியை தாக்குதல், தங்கள் பகுதியை விட்டு குற்றவாளியை வெளியேற்றுதல் என்பன பழங்கால தண்டனைகளில் சில..
*இடைக்காலத்தில் மரண தண்டனை மக்கள் மத்தியில் பல்வேறு முறைகளில் நிறைவேற்றப் பட்டு வந்திருக்கின்றன. கொதிக்கும் தண்ணீரிலோ, எண்ணெயிலோ குற்றவாளியை உயிரோடு போடுவது, தோலுரிப்பது, யானையின் காலால் மிதி பட வைப்பது என்பன இடைக்கால மரண தண்டனைகளில் சில.
*இப்படி ஆதிகாலத்திலிருந்து அதிக தூரம் பயணித்து வந்த போதும் இன்றைய சமூகத்திலும், மரண தண்டனை இருக்கவே செய்கிறது.
ஆரம்ப காலங்களில் மரண தண்டனை என்ற விஷயம் இப்படி வீரம் மிகுந்ததாகத் தான் தமிழ் சினிமாவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில், மரண தண்டனை குறித்த பக்குவமான படைப்புகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறையினருக்கும் தெரிந்த அளவில், மரண தண்டனைக் குறித்து பேசிய திரைப்படம் "விருமாண்டி".
கமலஹாசன் இயக்கி, நடித்த இந்தப் படம் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தது. மேலும், சிறைச்சாலைகளில் நடக்கும் ஊழல்களையும், சிறை அதிகாரிகளின் தவறுகளையும் கிராமிய பின்னணியோடு சொன்னது விருமாண்டி.
ஜெயகாந்தனின் "ஊருக்கு நூறு பேர்" என்ற நாவல் அதே பெயரில் 2001யில் திரைப்படமாக வெளியானது. இளங் கலைஞன் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மத குருவை கொல்ல நேரிடுகிறது. அவனுக்கு மரண தண்டனை கிடைக்கிறது. இந்தக் கருவைக் கொண்டு, மரண தண்டனை குறித்த அழுத்தமான பதிவாக உருவாகியிருந்த இப்படத்திற்கு 2001ஆம் ஆண்டிற்கான தேசிய விருதும் கிடைத்தது. லெனின் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். மரண தண்டனைக்கு எதிரான உறுதியான கருத்துக்களை இந்த இரண்டு படங்களும் பதிவு செய்திருந்தன.
* 1977 யில் 16 உலக நாடுகளில் மட்டுமே மரண தண்டனை நீக்கப்பட்டு இருந்தன.
* இன்று கிட்டத்தட்ட 100 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக நீக்கப்படுள்ளது.
* வருடத்திற்கு அதிகளவிலான மரண தண்டனைகளை நிறைவேற்றுவது சீனா. இதற்கடுத்து இரான், வடகொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் உள்ளன.
*தூக்கு தண்டனை இருக்கும் நாடுகளில் குற்றம் குறைந்ததாக எந்த வரலாறும் கிடையாது.
சட்ட ரீதியான கொலை என்று சொல்லப்படும் மரண தண்டனை, பெரும்பாலும் தமிழ் சினிமாவில் க்ளைமாக்ஸ் காட்சியாக மட்டுமே இடம் பிடித்திருக்கும். 1984யில் வெளியான "சட்டத்தை திருத்துங்கள்" என்ற படம் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தது. ராம நாராயணன் இயக்கியிருந்த இப்படத்தில் மோகன், நளினி, சத்யராஜ், போன்ற பலரும் நடித்திருந்தனர்.
மேலும், உதய கீதம்,மனிதனின் மறுபக்கம், ராஜாதி ராஜா உட்பட பல்வேறு படங்களிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் தூக்கு மேடை இடம் பிடித்திருந்தது.
இதுபோன்ற படங்களில் பெரும்பாலும், நிரபராதியான நாயகனுக்கு தூக்கு தண்டனை கிடைப்பதும், அதிலிருந்து அவர் தப்பி, நியாயத்தை எப்படி நிலை நாட்டுகிறார் என்ற அளவிலேயே கதைகள் இருக்கும். இதற்கு மாற்றாக ரமணா படத்தில், நாயகன் தூக்கு தண்டனையை ஏற்பது போன்று கதையமைக்கப்பட்டிருந்தது.
இப்படி தூக்கு தண்டனைக்கு ஆதரவாகவும், எதிராகவும் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இதன் முடிவு காலத்தின் கையில் தான் என்றாலும், இன்றைய காலத்திற்கு, நூறு குற்றவாளிகள் தப்பினாலும் பரவாயில்லை, ஓர் நிரபராதி மட்டும் தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்ற கருத்து வலிமை பெற்றிருக்கிறது. இந்த கருத்தினை பல படங்களிலும் தமிழ் சினிமா பதிவு செய்திருப்பது ஆரோக்கியமான விஷயமே.