இந்தியாவில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி தருவது, தங்களால்தான் தாமதகிறது என்ற குற்றச்சாட்டைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்துள்ளது.
கட்டமைப்பு மற்றும் சுரங்கம் சார்ந்த ஏராளமான தொழில் முதலீடுகளுக்கு தங்கள் துறை விரைந்து ஒப்புதல் தந்திருப்பதை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சுட்டிக்காட்டினார்.
மேலும், 40 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் அமையும் திட்டங்களுக்கு மட்டுமே, தங்கள் துறை ஒப்புதல் தேவைப்படுவதையும், இத்தகைய திட்டங்களின் அளவு, மொத்த அடிப்படை கட்டமைப்பு பணி திட்டங்களில் 9 சதவீதம் மட்டுமே என்றும் அமைச்சர் விளக்கினார்.
முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி தருவதற்கான நடைமுறையை மேலும் விரைவுபடுத்த தங்கள் அமைச்சகம் உரிய நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வனப்பகுதிகளில் அமையும் சாலைகள், பாலங்கள், எண்ணெய், எரிவாயு குழாய் பாதை போன்ற கட்டமைப்பு திட்டங்களுக்கு உள்ளூர் கிராம சபை
அனுமதி பெறத் தேவையில்லை என்ற முடிவையும் தங்கள் அமைச்சகம் எடுத்துள்ளதாக ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.