தமிழக அமைச்சரவை 8 ஆவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து கோகுல இந்திரா, விஜய், சிவபதி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக, வீரமணி, வைகை செல்வன், பூனாட்சி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.பதவி இழந்த அமைச்சர்களின் கட்சிப்பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.
தமிழக அமைச்சரவையில் 8-வது முறையாக மாற்றங்கள் செய்து, முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த பரிந்துரையின் அடிப்படையில், ஆளுநர் ரோசய்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சட்டம், நீதிமன்றங்கள், சிறை, பணியாளர் நலன், ஊழல் தடுப்பு ஆகிய இலாகாக்களை கவனித்து வந்த என்.ஆர்.சிவபதி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த விஜய் நீக்கப்பட்டுள்ளார். மேலும், சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திராவும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைகளின் அமைச்சராக, அருப்புக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைகைச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
காதி, கிராமத் தொழில்கள் வாரிய அமைச்சராக, மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பூனாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன.
சிவபதி வசம் இருந்த சட்டம், நீதிமன்றங்கள், சிறைத் துறை, பணியாளர் நலன் மற்றும் ஊழல் தடுப்பு துறைகள் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய அமைச்சர் செந்தூர் பாண்டியன் வசம் சுற்றுலாத் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி, நாளை காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பசுமை நாயகன்