பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு நாடுகளில் காதலர் தினம் கொண்டைாடப்படுகிறது. காதல் சின்னமாக காலம் தொட்டு விளங்குகிறது ரோஜா மலர்கள். உலகமெங்கும் காதலைச் சொல்லும் ஒரு மொழியாக இருக்கிறது ரோஜா மலர்.
அதுவும் இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் ரோஜா மலர்களுக்கு அவ்வளவு கிராக்கி...! ஆனால் பருவநிலை மாற்றத்தால் ரோஜா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், ரோஜா ஏற்றுமதிக்கு ஆர்டர் கிடைக்குமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர் விவசாயிகள்
காதலர் தினத்திற்காக, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி செய்யப்படுவது நடப்பாண்டில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மற்ற மாதங்களில் 2 ரூபாய்க்கு கூட கிடைக்கும் ரோஜா, பிப்ரவரி மாதத்தில் மட்டும் 15 ரூபாய் வரை விற்பதற்கு காரணம், இன்று இளைஞர்களிடையே அதிகரித்து வரும் காதலர்கள். காதலர் தினம், ரோஜா மலர்களுக்கான தேவையை அதிகரிப்பது வழக்கம். ரோஜா உற்பத்தியைப் பொருத்தவரை, நம்நாட்டில் பூனா, பெங்களூர் மற்றும் தமிழகத்தின் கிருஷ்ணகிரி போன்ற ஊர்கள்தான் பிரபலம். 45 முதல் 50 நாட்களில் பூக்கக்கூடியது ரோஜா செடி என்பதால், காதலர் தினத்தை மனதில் கொண்டு ரோஜா விவசாயிகள் டிசம்பரில் பயிரிட தொடங்குகின்றனர். இவை பிப்ரவரி முதல் வாரத்தில் அறுவடைக்கு தயாராவது வழக்கம். ஆனால், இந்த முறை பருவ நிலை மாற்றத்தால், வடக்கே பூனாவிலும், தமிழகத்தில் கிருஷ்ணகிரியிலும் ரோஜா அறுவடை காலம் மாறி விட்டது. பூனாவில் 21ம் தேதி வாக்கில்தான் ரோஜாக்கள் பறிக்க தயாராகும் என்பதால், ஏற்றுமதிக்கு வாய்ப்பு இல்லாத நிலை. கிருஷ்ணகிரியிலோ முன்கூட்டி அறுவடையான 40 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி ஆர்டர்களுக்காக காத்திருக்கும் சோகம்.
பூனாவில் இப்படி என்றால், கிருஷ்ணகிரியில் பருவ நிலையின் விளையாட்டே வேறு.
ஜனவரி மாதத்திலேயே பனி குறைந்து, வெயிலும் தொடங்கி விட்டதால், ரோஜாக்கள் சீக்கிரமாகவே மலரத் தொடங்கி விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதனால், அறுவடை காலத்துக்கு ஒரு வாரம் முன்னதாகவே அவற்றைப் பறிக்க வேண்டியுள்ளதாம். குளிர்பதன கிடங்கு வசதிகொண்ட விவசாயிகளும் ஒரு வாரம் வரை மட்டுமே ரோஜாக்களை பாதுகாக்க முடியும் என்பதால், அந்த வசதி இல்லாதவர்கள் மிகக் குறைந்த விலையில் உள்ளூரில் ரோஜாக்களை விற்கத் தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டில் 15 ரூபாய் வரை விலை போன தாஜ்மஹால், ஃபாஸ்ட் ரெட் ரோஜாக்கள் கூட, இப்போது 2 முதல் 4 ரூபாய்க்கே விலை போகிறது. அதனால், அடுத்த ஒரு வாரத்துக்குள் ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்காவிட்டால், ரோஜா பயிரிட்டோர் கடும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்கின்றனர் இவர்கள்.
2011-12ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 320 கோடி ரூபாய் மதிப்பிலான பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அவற்றில் 160 கோடி ரூபாய் அளவுக்கு ரோஜாக்கள் இடம்பெற்றன. அதிலும், காதலர் தின மாதமான பிப்ரவரியில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட ரோஜா ஏற்றுமதி நடந்தது. ஆனால், இந்தமுறை குளிர்பதனக் கிடங்கு பற்றாக்குறை, பருவ நிலை மாற்றம், ஏற்றுமதி ஆர்டர் சரிவு ஆகிய காரணங்களால் ரோஜா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டில் ரோஜா பயிரிடும் தொழிலை பலர் கைவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, காதலர் தினத்துக்கென ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதியாகும் ரோஜாக்கள் அனைத்தும் 'பூக்கள் நகரம்' எனப்படும் ஹாலந்தின், ஆம்ஸ்டர்டாம் வந்து குவிவது வழக்கம். அங்கு ஏலம் விடப்பட்டு, காதலர் தினத்தில் உலக காதலரின் கைகளை அடைந்து, அங்கிருந்து காதலியின் கூந்தலை அடைவது வழக்கம். இதனால்தான் அவற்றுக்கு அதிக விலை கிடைத்து வந்தது.
ஆனால், இந்த ஆண்டு ஏற்றுமதி ஆர்டர் கிடைக்காமல் உள்ளூர் ரோஜா விவசாயிகள் சிந்தும் கண்ணீர், இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ரோஜா மலர்களைவிட மலிவான விஷயமாகியிருப்பதாக இத்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.