புதிய தலைமைச் செயலகத்தில் மருத்துவமனை செயல்பட இடைக்காலத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாய சென்னை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் ரூ. 1,200 கோடி செலவில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. தொடர்ந்து, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே தலைமைச் செயலகத்தை மாற்றினர்.
மேலும், புதிய தலைமைச் செயலகத்தை ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படும் வகையில் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதனை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புதிய தலைமைச் செயலகத்தை, அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் திட்டத்தில் எந்த விதி மீறலும் இல்லை என்றும் தீர்ப்பு அளித்தனர். மேலும் மேலும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம் நீக்கிய தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும், உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் புதிய தலைமைச் செயலகத்தில் மருத்துவமனை செயல்பட இடைக்காலத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாய சென்னை அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.