தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, இலங்கை அதிபர் ராஜபக்சவின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன்படி, தலைநகர் டெல்லி செல்வதை ராஜபக்ச தவிர்த்துள்ளார்.
அதற்குப் பதிலாக நேரடியாக ஒடிசா மாநிலத்தின் கட்டக்கிற்கு செல்கிறார். அங்கிருந்து தனியார் பிரத்யேக விமானத்தில் பிகாரில் உள்ள புத்த கயா செல்லும் அவர், இன்று மாலை திருப்பதி செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக திருமலைக்கு செல்லும் ராஜபக்ச, இரவு மலையிலேயே தங்குகிறார். நாளை அதிகாலையில் திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்யும் அவர், காலை ஒன்பது மணிக்கு சிறப்பு விமானத்தில் கொழும்பு புறப்பட்டு செல்கிறார்.
இதற்கிடையில் இலங்கை அதிபர் ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் டெல்லி, திருப்பதி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் பிரதமர் இல்லத்தை நோக்கிப் பேரணி செல்ல மதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும ஏராளமான தமிழ் அமைப்பினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திமுகவினர் கறுப்புக்கொடி அணிந்து ராஜபக்சவின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
இதுதவிர, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ராஜபக்சவின் வருகையை கண்டித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.