விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணத்
தொகையை உயர்த்தித்தரவேண்டும்
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை உயர்த்தித்தரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். பிற மாவட்ட விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதி விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை எவ்வளவு என்பதை தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா மாவட்டத்தில் அமைச்சர்கள் ஆய்வு நடத்திய பின்னர், விவசாயிகளுக்கான நிவாரணத் தொகை 15 ஆயிரமாக உயர்த்தப்பட்ட போதிலும், பிற மாவட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வெளியிடப்படவில்லை என்று கூறியுள்ள அவர், இதனால், விவசாயிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளை மீட்டெடுக்கும் நோக்கில் டெல்டா விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணத் தொகையை உயர்த்தவும், மற்ற மாவட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை தாமதமின்றி அறிவிக்கவும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------
சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் வகையில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது மின்னணுக் குப்பைகள். மின்குப்பைகளை உருவாக்குவதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பதே அச்சத்தை ஏற்படுத்தும் புள்ளி விபரம்.
இவற்றை அகற்றுவதற்கு முறையான வழிமுறைகளை உருவாக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாகியும், சில நிறுவனங்கள் மெத்தன போக்கைக் கடைபிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரண்டாம் இடத்தில் தமிழகம்: அறிவியல் தொழில் நுட்பம் ஒருபுறம் வளர்ச்சி பெற்று பிரம்மிப்பை ஏற்படுத்தினாலும், அதனால் உருவாகும் கழிவுகள், பிரமிடுகளை மிஞ்சும் அளவிற்கு உயர்ந்து நம்மை அச்சுறுத்த செய்கின்றன.
இந்தியாவில் 5 கோடி டன் மின்குப்பைகள் சேர்வதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, மின்குப்பைகள் உருவாக்குவதில் மகாராஷ்ட்ரா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக கூறி, தமிழர்களின் தலையில் இடியை இறக்குகிறது சமீபத்திய புள்ளி விபரம்.
இவ்வாறு உருவாகும் மின்குப்பையில், 5 சதவிகிதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்பட்டுகிறது. மீதமுள்ள குப்பைகள், மண்ணுக்குச் சென்று, மனிதர்களுக்கு ஆபத்தை உருவாக்குவதாக எச்சரிக்கின்றது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.
வெளிப்படும் வேதிப்பொருட்கள்: ஒரு கம்யூட்டர் தயாரிக்க அதிகளவில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதனை எரிக்கும் போது வெளிவரும் டயாக்சின், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. பேட்டரி தயாரிக்க பயன்படுத்தப்படும் பாதரசம், மண்ணிலோ, நீரிலோ கலக்கும் போது மனிதனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும், காரீயம், குரோமியம் 6, பெரிலியம் கேட்மியம், உள்ளிட்ட பல வேதி பொருட்கள் மின்குப்பைகளிலிருந்து வெளிப்படுகின்றன. இதனால், உடல் உறுப்புகள் பாதிப்பு, டி.என்.ஏ. மூலக்கூறுகள் பாதிப்பு போன்ற மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை மறுசுழற்சி செய்யும் அமைப்புகளும் ஆமோதிக்கின்றன.
சமூக பொறுப்புடன் செயல்படுவோம்:சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சரியான சட்ட வழிகாட்டுதல்களும், முறையான திட்டமிடல்களும் தேவை என மறுசுழற்சி செய்யும் அமைப்பினர் கூறுகின்றனர். எனவே, உபயோகித்து முடிந்த மின்னணு சாதனங்களை தெருவில் கொட்டாமல், மக்கும், மக்காத குப்பை என்று தரம்பிரித்து மறுசுழற்சி செய்யும் அமைப்புகளிடம் ஒப்படைக்குமாறும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்
-பசுமை நாயகன்
ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிராக போராட்டங்கள்
இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், பீகார் பயணத்தை முடித்துக்கொண்டு சுவாமி தரிசனத்திற்காக திருப்பதி சென்றுள்ளார். அங்கு அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து தனி விமானத்தில் 70 பேர் அடங்கிய குழுவுடன் இன்று காலை கயா விமான நிலையம் வந்த ராஜபக்ஷவை, பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வரவேற்றார்.
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மஹாபோதி கோயிலுக்கு சென்ற ராஜபக்ஷே, அங்கு தரிசனம் செய்தார். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் லெனின் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
பீஹார் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி விமான நிலையத்திற்கு மாலை 5.45 மணிக்கு வந்த ராஜபக்ஷே, அங்கிருந்து கார் மூலம் திருப்பதி சென்றடைந்தார். திருப்பதி கோயில் அருகே உள்ள பத்மாவதி மஹாலில் இன்று இரவு ஓய்வெடுக்கும் ராஜபக்ஷே, நாளை அதிகாலை 2. 30 மணியளவில் சுப்ரபாத தரிசனம் செய்கிறார்.
பி்ன்னர் நாளை காலை 9.20 மணிக்கு திருப்பதி விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் கொழும்பு திரும்புகிறார்.
முன்னதாக, திருப்பதி அருகே ராஜபக்ஷேவிற்கு எதிராக மதிமுகவினர் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பதி ரயில் நிலையம் வைக்கப்பட்டிருந்த ராஜபக்ஷவின் பேனர்களையும் கிழித்து எறிந்தனர். புத்தூர் அருகே ஆர்ப்பாட்டகாரர்கள் வந்த 50ற்கும் மேற்பட்ட வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. போராட்டங்களை தொடர்ந்து திருப்பதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
சிஆர்பிஃஎப் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பதி விமான நிலையத்திலிருந்து திருப்பதி கோயில் வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு, ராஜபக்ச நாடு திரும்பும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.