2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவை நேரில் சாட்சியளிப்பதற்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி. சாக்கோ தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விவகாரத்தில் கூட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களிடமும் ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இதைத் தெரிவித்தார்.
மற்ற முக்கிய சாட்சிகளை அழைத்து விசாரித்தது போல ஆ. ராசாவையும் விசாரிப்பது தற்போதைய நிலையில் தவிர்க்க முடியாதது அல்ல என்றும், விருப்பம் தெரிவிக்கும் அனைவரையும் விசாரிப்பது சாத்தியமல்ல என்றும், பி.சி. சாக்கோ கருத்து தெரிவித்துள்ளார்.
2 ஜி வழக்கில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பாக ஆஜராகி சாட்சியம் அளிக்க ஆ.ராசா ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் பி.சி.சாக்கோவுக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.
________________________________________________________________________
மதுவிலக்கு கோரி சென்னையில் இன்று 33-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காந்தியவாதி சசி பெருமாள், கோரிக்கை நிறைவேறும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சசி பெருமாளின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், நேற்று அவர் நேற்று ரத்தவாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. சசி பெருமாளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் பல்வேறு தரப்பினரும், உடல்நிலையை கருதி, போராட்டத்தை கைவிடுமாறு அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை, போராட்டத்தை கைவிடப் போவதில்லை என சசி பெருமாள் திட்டவட்டமாக கூறி வருகிறார்.
இந்த நிலையில் காந்தி படத்தில் மகாத்மா காந்தியாக நடித்த கனகராஜ், நேற்றிரவு சசி பெருமாளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர், அவருடன் சேர்ந்து கனகராஜூம் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இதனிடையே, சசி பெருமாளுக்கு ஆதரவாக, சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் மது ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
உண்ணாவிரதத்தை கைவிடுவது குறித்த அறிவிப்பை நாளை காலை வெளியிடுவதாக காந்தியவாதி சசி பெருமாள் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமையிலான காந்தியவாதிகள் சிலர், சசி பெருமாள் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நேரில் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக அவர்கள் இயற்றிய தீர்மானத்தையும் சசி பெருமாளிடம் வழங்கினர். காந்தியவாதிகளின் இந்த கோரிக்கையை மனப்பூர்வமாக ஏற்பதாக சசி பெருமாள் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தார். எனினும் தமது முடிவை நாளை காலை 10 மணியளவில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவிததுள்ளார்.
இந்நிலையில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி காந்தியவாதிகள் நடத்தும் மனித சங்கிலி போராட்டம் நாளை மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு சசி பெருமாள் தலைமை தாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.