தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மார்ச் 31ம் தேதிக்குள் அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கெடு விதித்துள்ளது.
மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற கால அவகாசம் கோரிய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வாகன விபத்துக்களை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த கடைகளில் மது அருந்தும் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது விபத்துகள் நேரிடுகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேசிய நெஞ்சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மார்ச் 31ம் தேதிக்குள் மூடுமாறு உத்தரவிட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு : தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் 410 டாஸ்மாக் கடைகளில் இதுவரை 75 டாஸ்மாக் கடைகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 335 டாஸ்மாக் கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்ற கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என கூறியது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் இன்னும் 3 தினங்களுக்கு் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மாற்ற வேண்டும் என்ற நிலையில் மாற்றுக் கருத்தே இல்லை என தெரிவித்துள்ளது.