இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சேனல்-4 ஒளிபரப்பிய ஆவணப் படத்தை எடுத்த கெலம் மெக்ரே , விரிவான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கையில் உள்ள யாரும் தங்களுக்கு உதவி செய்யவில்லை என்றும், இந்த ஆவணப் படத்தை எடுப்பதற்காக யாருக்கும் தாங்கள் பணம் கொடுக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
சேனல்-4 வெளியிட்ட ஆவணப் படத்தின் உண்மைத் தன்மையால், உலக நாடுகளின் மீதான பார்வை தற்போது இலங்கையின் மீது விழுந்துள்ளதாக மக்ரே குறிப்பிட்டுள்ளார். அரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சிப்பவர்கள் காணாமல் போவதும், மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள் அடக்கப்படுவதும் வாடிக்கையாக நடைபெறும் நாட்டில், தகவல்கள் கிடைக்கப் பெற்ற விதத்தை கொண்டு அரசாங்கம் அச்சுறுத்தல்களை மேற்கொள்வது முறையற்றது என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சேனல்-4ன், முதல் ஆவணப்படம் வெளியிடப்பட்ட போது, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, குற்றச்சாட்டுகளை மேலும் மேலும் மறைக்க முற்படுவதால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று தெரிவித்ததையும் மக்ரே, தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
"NO FIRE ZONE" ஆவணப்படம் தொடர்பாக இலங்கையில் வசிக்கும் எந்தக் குடிமகனும், ஆதாரங்களை வழங்கவில்லை என்றும், மெக்ரே தெரிவித்துள்ளார். சேனல்-4 வெளியிட்ட ஆவணப் படத்திற்கு ஆதாரம் வழங்கியவர்களை கைது செய்யப் போவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி, அந்நாட்டில் வெளியாகும், தி திவைனா (The Divaina) என்ற நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.