விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பது தொடர்பான பிரச்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று சென்னையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், கோவை மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொள்கின்றனர். மத்திய அரசின் கெயில் நிறுவனத்தின் சார்பில், எரிவாயு குழாய் அமைப்பதில், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உறுதி அளித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி முதல்கட்டமாக இன்று கோவை, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
கொச்சினில் இருந்து பெங்களூருக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 7 மாவட்டங்கள் வழியே குழாய் மூலம் எரிவாயு கொண்டுச் செல்லப்படுகிறது.
இத்திட்டத்திற்காக, மத்திய அரசின் கெயில் நிறுவனம் விளைநிலங்களில் எரிவாயு குழாய்களை பதிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலங்களுக்கு குறைந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், குழாய் மூன்றாவது முறையாக சேதமடைந்தால் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளருக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
-பசுமை நாயகன்.
***********************************************************************************************************
விவசாய கடன் தள்ளுபடி
விவசாய கடன் தள்ளுபடி குறித்த, மத்திய தணிக்கைத்துறையின் அறிக்கை, உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் தயாரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணியின் இந்த திட்டத்தால் மக்கள் பயனடைந்ததால் தான், அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர், இதில் எங்கு முறைகேடு நடைபெற்றிருக்கும் என எனக்கு தெரியவில்லை என்றார்.
உண்மை நிலையை தெரிந்துகொள்ளாமல், தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பது தெரிகிறது. தணிக்கைத்துறை குறித்து பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், அரசியல் சாசன அமைப்பை குறை கூறுவதாக கூறுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. அரசியல் சாசன அமைப்பு தனது நம்பகத்தன்மையை இழந்து விட கூடாது. எனவே இந்த அறிக்கை உண்மையை கூறுவதாக இல்லை என தெரிவித்தார்.
**********************************************************************************************************
இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 6வது முறையாக முதல் இடத்தில் உள்ளார். உலக பணக்காரர்களின் பட்டியலை பிரபல பத்திரிக்கையானஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
இதில் மெக்சிகோவை சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 73 பில்லியன் டாலர் ஆகும். இவரைத் தொடர்ந்து 67 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முகேஷ் அம்பானி 21.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புகளுடன் இந்தியாவில் முதல் இடத்தையும், உலக அளவில் 22வது இடத்திலும் உள்ளார். 16.5 பில்லியன் டாலர்களுடன் லஷ்மி மிட்டல் இந்தியாவில்2வது இடத்தையும், உலக அளவில் 41 இடத்தையும் பிடித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள, ஆயிரத்து 426 பேர்களைக் கொண்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 55 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.