ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் முக்கிய விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் வென்ட்ரல், பாதிக்கப்பட்ட மக்களுக்கான கடமைகளை நிறைவேற்ற இலங்கை அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர இருப்பதாக கூறினார்.
மேலும் இந்த தீர்மானம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையக் குழுவின் திடமான பரிந்துரைகளை பின்பற்றுமாறு இலங்கையை வலியுறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமரசத்தை உருவாக்குவதற்காக கடந்தாண்டு கொண்டுவந்த தீர்மானத்தின் அடுத்தக்கட்டமாக, தற்போது புதிய தீர்மானத்தை தாக்கல் செய்ய இருப்பதாக அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.அதேநேரத்தில், மனித உரிமை ஆணையத்தில் எப்போது தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.
இதனிடையே ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் , இலங்கைத் தமிழர் பிரச்னையில் உண்மையான உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை பலமுறை தாம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.
**********************************************************************************
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் புகாரை அதிபர் ராஜபக்ச மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ராஜபக்ச, பாலச்சந்திரனை ராணுவத்தினர் கொன்றிருந்தால் தமக்கு தெரிந்திருக்கும் என கூறியுள்ளார்.
ராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் புகாரை மறுப்பதாக தெரிவித்த ராஜபக்ச, அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றார். போர்க்குற்றம் தொடர்பான புதிய காட்சிகள் பற்றி விளக்கமளித்த அவர், ஒருசார்பாக இதனை பார்க்கக்கூடாது என தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில், இலங்கை அரசுக்கு எதிரான ஒரு அமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை மட்டும் கேட்கக்கூடாது என ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். அவர்கள், வெளிநாடுகளின் ஆதரவுடன் அரபு நாடுகளில் ஏற்பட்டது போன்ற புரட்சியை உருவாக்க முயற்சி செய்வதாகவும் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என கூறிய அதிபர் ராஜபக்ச, மற்ற மாகாணங்களைப் போன்று அதிகாரங்கள் வழங்கப்படும் என்றார். போர் முடிந்த 3 ஆண்டுகளில் மறுசீரமைப்பு பணிகளை செய்துமுடித்துவிட்டதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் குறித்து பேசிய ராஜபக்ச, தங்களின் பாவங்களை மறைக்க ஒவ்வொருவரும் இலங்கையை பயன்படுத்திக் கொள்வதாக குற்றம்சாட்டினார்.
மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை மனித உரிமை ஆணையம் கண்டித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். தீர்மானம் குறித்து இந்தியாவுடன் பேச்சு நடத்தவில்லை என கூறிய ராஜபக்ச, தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதா, வேண்டாமா என்பது பற்றி நட்பு நாடு என்ற முறையில் இந்தியா முடிவெடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்க சிலர் முயற்சிப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அதிபர் ராஜபக்ச தெரிவித்தார். போர்க்குற்ற புகாரில் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறிய ராஜபக்சே தாம் ஒரு புத்தவாதி என்பதால், தனக்கு சகிப்புத்தன்மையும் இரக்க உணர்வும் உள்ளதாக தெரிவித்தார்.