இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது. விடிய விடிய கொட்டும் பனியில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் சார்பின்றி நடைபெறும் இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடையும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், ஆங்காங்கே உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த, இலங்கை அதிபர் ராஜபக்சவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லையில் மாணவர்கள் உண்ணாவிரதம்: இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரும், நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் 13 பேரும், தூய சவேரியார் கல்லூரி மாணவர்கள் 11 பேரும் நேற்று பிற்பகல் முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். தங்களின் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்:இலங்கை அரக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக்கூறி, கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, புதுச்சேரியிலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர், புதிய பேருந்து நிலையம் அருகே, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணாமலைபல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்: இலங்கை அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், இலங்கைக்கு எதிரான தீர்மனத்திற்கு இந்தியா ஆதரவளிக்கக் கோரியும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நீடிக்கிறது.
******************************************************************************************
11 மாதங்களில் சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இத்தகவலை தொழில் துறை அமைப்பான அசோச்செம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்றுமதி தொழிலில் கடந்த 11 மாதங்களில் சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இத்தகவலை தொழில் துறை அமைப்பான அசோச்செம் வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அசோச்செம் இதன் விளைவாக வேலை இழப்புகள் ஏற்பட்டதாக விளக்கியுள்ளது.
தோல், ஆயத்த ஆடை, மதிப்பு மிக்க கற்கள், நகை போன்ற பிரிவுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அசோச்செமின் ஆய்வறிக்கை கூறுகிறது. பொறியியல் தொழில் பிரிவுகளிலும் இதற்கு தப்பவில்லை என இந்த அறிக்கை கூறியுள்ளது. இத்தொழில்களில் லாப வீதங்கள் வெகுவாக குறைந்துவிட்டதாகவும் இதை சமாளிக்கவே ஆட்குறைப்புகள் நடப்பதாகவும் கூறியுள்ளது.
ஏற்றுமதி தொழில்களில் நடப்பு சூழல் அபாயகரமாக இருப்பதாகவும இதில் உடனடியாக அரசின் தலையீடு தேவை என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்றுமதி தொழில் துறைகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு கூடுதல் சலுகைகளை தர வேண்டும் என அசோச்செம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் ஏற்றுமதி சார்ந்த தொழில் பிரிவுகளில் 17 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் அசோச்செம் சுட்டிக் காட்டியுள்ளது.
************************************************************************************
சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே 7-வது கேட் உள்ளது. அதன் அருகே உள்ள பகுதியில் கடலோர பாதுகாப்புப் படை விமானங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
விமானம் நிறுத்தப்படும் இடத்தில் அதிக வெளிச்சம் வேண்டும் என்பதற்காக அங்கு அதிக சக்தி கொண்ட சோடியம் விளக்குகள் அமைத்துள்ளனர். இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் வெப்பம் அதிகரித்த காரணத்தால் ஒரு சோடியம் மின் விளக்கு வெடித்துச் சிதறியது.
அந்த சோடியம் விளக்கு அருகில் மின்பெட்டி பொருத்தி இருந்தனர். சோடியம் விளக்கு வெடித்த வேகத்தில் அதிலிருந்து மின் கசிவு ஏற்பட்டது. திடீரென அந்த மின் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்ட பகுதியில் தீ பிடித்தது. மளமளவென தீ பரவியது.
அங்கிருந்த கடலோர பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்தனர். பிறகு அவசரகால தீயணைப்பு கருவிகளைக் கொண்டு சோடியம் விளக்கில் பிடித்த தீயை அணைத்தனர். இதனால் சிறிது நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடலோர பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அதிர்ஷ்டவசமாக தீ பெரிய அளவில் பரவாததால் 7-வது கேட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர பாதுகாப்புப் படை விமானங்கள் தப்பின. என்றாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.