அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், நடத்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அதனை இலங்கை அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது என்றும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு, மத்திய அரசு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும், அத்துடன்,அமெரிக்கத் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்த தேவையான மாற்றங்களையும் சுதந்திரமான முறையில் செய்ய வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
கடந்தாண்டு ஜெனிவாவில் அமெரிக்கா, தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய பிறகும், இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்தத் தருணத்தில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக இந்தியா எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காதது வருத்தமளிப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாகவும், மத்திய அரசு மௌனியாக இருப்பது அதிருப்தியளிப்பதாக குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, அமெரிக்காவின் தீர்மானத்தை தைரியமாக ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.