கர்நாடகாவில் பாரதிய ஜனதா அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல்
கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அம்மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை உடனடியாக பணிமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் பாரதிய ஜனதா அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் பிரம்மா மற்றும் சையது நசிம் அகமது ஆகியோர், கடந்த 2 நாட்களாக கர்நாடக மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களைச் சந்தித்து, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து விவாதித்தனர்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொடக்கப் பணிகள் திருப்திகரமாக இருந்ததாக கூறினார்.
********************************************************************************************
புதுச்சேரியில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் புதுச்சேரி அண்ணாசாலையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஏஐடியுசியின் சார்பில் புதுச்சேரி இந்திரா சிலை முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு பெட்ரோல் விலையை ஏற்றும் போதெல்லாம் மாநிலத்தில் ஆளும் என் ஆர் காங்கிரஸ் அரசு மவுனம் சாதிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். பெட்ரோல் விலை நேற்று முதல் லிட்டருக்கு 1 ரூபாய் 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
*********************************************************************************
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஊழலில் திளைத்து வருவதாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவுவதற்கு, ஊழலே முக்கிய காரணமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், உள்நாட்டுப் பாதுகாப்பு, நிதி விவகாரங்கள் என அனைத்து மட்டங்களிலும் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உதவி புரிந்த முதலமைச்சர் நரேந்திர மோதிக்கு, ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட 2,200 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், சேது சமுத்திரத் திட்டம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கட்சியின் நாடாளுமன்றக் குழுவை விரிவுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் ஆகியோருக்கு அந்தக் குழுவில் இடம் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-பசுமை நாயகன்