உலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் பருவமழை பொய்த்துப் போன காரணத்தால் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் நீலகிரி மாவட்டம் பற்றியும், புதுச்சேரியில் உப்பாகி வரும் நிலத்தடி நீர் பற்றிய விவரம்:-
விண்ணைத் தொடத் துடிக்கும் உயரமான சிகரங்கள், ஆங்காங்கே தென்படும் சின்னச்சின்ன அருவிகள் என காணும் இடமெங்கும் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசமாகக் காட்சியளிக்கும் மாவட்டம் நீலகிரி. இந்த மாவட்டத்திற்கு பார்சன்ஸ்வேலி, டைகர்ஹில், ரேலியா ஆகிய நீர் நிலைகள் முக்கிய நீராதாரங்களாக உள்ளன. இந்த நிலையில் கடந்த ஆண்டில் மழை பருவத்தே பெய்யாமல் போனதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நீலகிரி மாவட்டம் வறட்சியை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, உப்பு நீர் உட்புகுந்து, நிலத்தடி நீரையே பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.இது மட்டுமின்றி, குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளும் குடியிருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் குடி நீருக்கே பெரும் தட்டுப்பாடு உருவாகி வருகிறது.
இந்த நிலையில் வனங்களை அழிக்காமல் பாதுகாப்பது ,கிடைக்கும் கொஞ்ச நஞ்சத் தண்ணீரையும் வீணாக்காமல் இருப்பது, நீர்நிலைகளைப் பராமரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளைச் செய்தால் தான் வருங்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படாமல் இருக்கும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்று உலகம் முழுவதும் பூமி நேரம்
கடைப்பிடிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் இன்று பூமி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்றிரவு எட்டரை மணிக்குத் தொடங்கி ஒன்பதரை மணி வரையிலான ஒரு மணி நேரம், அனைத்து விளக்குகளையும் அணைக்க, இயற்கைக்கான உலக வனஉயிர் நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் நகரங்களில், பூமி நேரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.இந்தியாவில், சென்னை உட்பட மொத்தம் 150 நகரங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. 2007ஆம் ஆண்டு சிட்னியில் தொடங்கிய பூமி நேர கடைபிடிப்பு, அடுத்தடுத்த ஆண்டுகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான முக்கிய பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.