தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசு இனியும் மௌனம் சாதிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 2 மற்றும் 6ம் தேதிகளில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் 16 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதையும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற தாக்குதல்களை இலங்கைக் கடற்படையினர் திட்டமிட்டு நடத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கூடாது என்பதற்காக இந்திய அரசுக்கு மறைமுகமாக விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே இதனைப் பார்க்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
*****************************************************************
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தந்தையும் மகனும் ஒரே மேடையில் முனைவர் பட்டம் பெறுவது, பெருமிதத்திற்குரியது மட்டுமல்ல, நெகிழ்ச்சியான விஷயமும் கூட. இத்தகைய ஒரு நிகழ்வு திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அரங்கேறியது.
பட்டம் பெற வந்தவர்களையும், பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்திய அந்த தந்தை மகனை பற்றிய கதை இது.
திருச்சி மாவட்டம், தென்றல் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியனுக்கு தற்போது 65 வயது. 45 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியுள்ள இவர், பல்வேறு பட்டங்களையும், சிறப்பு ஆசிரியருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
சுப்பிரமணியனுக்கு மனைவியுடன் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். குலதெய்வ வழிபாடு குறித்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை கட்டுரையாக சமர்ப்பித்து தற்போது முனைவர் பட்டம் பெற்றுள்ளார் சுப்ரமணியன்.
"மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னூற்றான் கொல்"
எனும் சொல் என்ற மறை வாக்கிற்கு ஏற்ப இவரது மகன் கொளஞ்சி கண்ணன் அணுத் துகள் ஆராய்ச்சியை எட்டு ஆண்டுகள் மேற்கொண்டு கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.
ஆய்வு செய்யும் ஊக்கத்தை தந்தையின் விடாமுயற்சியைக் கண்டே வளர்த்துக் கொண்டதாக கூறுகிறார் கண்ணன். இத்தகைய மகனையும், கணவனையும் அடைந்தது குறித்து பெருமிதம் அடைவதாக கூறியிருக்கிறார் சுப்பிரமணியனின் மனைவி.
பாரதிதாசன் பல்கலை.யில் நெகிழ்ச்சி:
பட்டமளிப்பு விழா என்றாலே பொதுவாக அவ்விடத்தில் உற்சாகத்திற்கு பஞ்சமிருக்காது. அதிலும் தந்தையும் மகனும் ஒரே மேடையில் பட்டம் பெறும் அதிசயத்தில் அனைவருமே வியந்து பாராட்டியதும் அரங்கேறியது. நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கலந்த அனுபவமாக இந்த பட்டமளிப்பு விழா மாறியது.
____________________________________________________________________
இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம்
____________________________________________________________________
இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம்
குமரிக் கடல் பகுதியில், நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருப்பதால், நெல்லை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், நீலகிரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.