மதுரை மாவட்டம் நரசிங்கபட்டி கிராமத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் புதைக்கும் இடமாக கருதப்படும் ஈமக்காடு பகுதியை, தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தக் காலத்தில் இறந்தவர்களை எப்படி புதைத்தார்கள் என்பது குறித்து பல அரிய தகவல்கள் இந்த கண்டுபிடிப்பு மூலம் தெரியவந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மதுரையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரசிங்கபட்டி கிராமத்தில், பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ளது இந்த இடம். இங்கு 40 ஏக்கர் பரப்பில் கல்வட்டம், கல்குகை, கல் திட்டை, கல் பதுகை ஆகியவை உள்ளன.
பண்டைய காலத்தில் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் உறவினர்களை புதைத்து, அவற்றின் அடையாளத்திற்காக இதுபோன்ற கல் வட்டங்களையும், கல் திட்டைகளையும் அமைத்ததாக கூறுகின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.
முதுமக்கள் தாழியை மக்கள் பயன்படுத்தியதற்கு முந்தைய காலம் இது என்றும், உலகிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் இதுபோன்ற ஈமக்காடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி பகுதிகள் என தொல்லியல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், அழகன் குளம் வரிசையில் நரசிங்கபட்டியும் சேர்க்கப்பட வேண்டும் என்றும், இங்கு பெரிய அளவில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.
நரசிங்கபட்டியில் பண்டைய கால ஈமக்காட்டில் கற்களை போட்டு மூதாதையர்களை வணங்கும் வழக்கம் இருந்துள்ளது. தற்போதும் அந்த பழக்கத்தைத் தொடரும் நரசிங்கபட்டி மக்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் கூறும் தகவல்கள் வியப்பாக இருப்பதாக கூறுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பண்டைய காலத்து ஈமக்காடு குறித்து ஆய்வுகள் நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், இதன்மூலம் தமிழர்களின் நாகரிக வரலாறு குறித்து உண்மைகள் தெரிய வரும் என்றும் கூறுகின்றனர்.