நீலகிரி மாவட்டத்தில் 7000 கோடி ருபாய் செலவில் நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். விதி எண் 110ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகளுடன் மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் ஓடும், குந்தா நதியின் துணை நதியான சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே நிறுவப்படவுள்ள நீர் தேக்கத்தை பயன்படுத்தி 2000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புனல் மின் நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டம் 8 முதல் 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுதவிர, மின் கட்டமைப்புகள் மற்றும் மின் தொடரமைப்புகளை வலுப்படுத்த, ஜப்பான் நிறுவனம் ஒன்றின் நிதியுதவியுடன் 5000 கோடி ருபாய் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறினார். இதேபோல் தென் மாவட்டங்களில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்தார். '
வீடுகளில் சூரிய மின் சக்தி உற்பத்தி கருவிகளை பொறுத்துவதற்கு, கிலோ வாட் ஒன்றிற்கு 20000 ரூபாய், முதலீட்டு மானியமாக வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதேபோல், இந்த ஆண்டு 56 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் எனக் கூறிய முதல்வர் ஜெயலிலதா, 11 இலட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.