நிலத்தடி நீர்மட்டம் குறைவது பற்றிப் பேசியும் எழுதியும் வந்த போதிலும், இந்த விஷயத்தில் நாம் காட்டிய அலட்சியம், இன்று நம்மை எங்கு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக களத்தில் இறங்கியது புதிய தலைமுறை.
சென்னை மட்டுமல்லாது சில மாவட்டங்களில் இருந்தும் நிலத்தடி நீரைச் சேகரித்த நமது செய்தியாளர் குழு, அதனை ஆய்வுக்கு உட்படுத்தியது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில மாவட்டங்களில் நிலத்தடி தண்ணீரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டபோது பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீரில் 1000 மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டிய குளோரைடின் அளவு 10 மடங்கு அதிகரித்து 10,400 மில்லி கிராமாக இருந்தது. இங்குள்ள நிலத்தடி நீரில் குறைந்த அளவு இருக்க வேண்டிய சல்ஃபேட்டின் அளவும் 17 மடங்குகள் அதிகரித்து இருந்தது. மேலும் இந்த தண்ணீரில் அதிகப்பட்சம் 2000 மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டிய கலக்கப்பட்ட திடப்பொருட்கள் 22ஆயிரத்து 80 மில்லி கிராமாக உள்ளது. மொத்தத்தில் இங்குள்ள நிலத்தடி நீர் அதிக தாதுக்கள் நிறைந்து குடிக்கும் தரத்தை இழந்து விட்டது என்பதே நமது ஆய்வின் முடிவில் கிடைத்த தகவல்.
இது இவ்வாறிருக்க, வடசென்னைப் பகுதியில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில், சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கக்கூடிய நைட்ரஸ் நைட்ரஜன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் பைப்லைன்களில் ஏற்படும் கசிவே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
சென்னையில் ஓரளவு ஆறுதல் அளித்தது மத்திய சென்னையின் நிலத்தடி நீர் தான். காரணம் இங்கு கிடைத்த தண்ணீரை, சுத்திகரித்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதுதான். என்றாலும், இப்பகுதியில் பெருகி வரும் வாகன பழுது நீக்கும் மையங்களால் இது தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகம்தான்?!
தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள காவிரி கரை நகரமான திருச்சியில் சேகரித்த நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்தில் இருந்தது. கலங்கிய நிலையில் இருப்பதோடு, ஒருவித துர்நாற்றத்துடனும் இருந்தது பல சந்தேகங்களை நமக்கு எழுப்பியது. அதனை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அதில், இரும்புத் தாதுக்கள் 20 மடங்கு அதிகமாகவும், தண்ணீர் 15 மடங்கு அதிகம் கலங்கியிருந்ததும் தெரியவந்தது. இந்த தண்ணீர் மனித பயன்பாட்டிற்கு மட்டுமல்ல, விவசாயத்திற்கும் தகுந்ததல்ல என்பதுதான் ஆய்வு சொல்லும் இறுதி முடிவு.
தொழில்நகரமான திருப்பூரில் நாம் சேகரித்த நிலத்தடி நீர் வேறு பல கோணங்களில் தரமிழந்து இருந்தது. குடி தண்ணீரில் இருக்க வேண்டிய கனிம தாதுக்கள் இங்குள்ள தண்ணீரில் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால் இது போதிய சத்துக்கள் இல்லாமல் உள்ளது. மேலும், இங்கு அதிகரித்து வரும் சாய ஆலைக் கழிவுகள் நீரின் தரத்திற்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்தமிழகப் பகுதியில் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிக அளவில் உள்ளதும், மேலும் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் முழுமையாகவே மாசடைந்திருப்பதும் நாம் மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் தெரிய வந்தது.
தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பல தரப்பட்ட முடிவுகள் இருந்தாலும், நிலத்தடி நீர் என்ற மிகப்பெரிய ஜீவ ஊற்று இந்த நேரத்தில் பேரழிவை சந்தித்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.
"தண்ணீர், தண்ணீர் எங்குமே, குடிக்க ஒரு துளி இல்லையே" என்ற புகழ்பெற்ற ஆங்கில கவிதையின் வரிகள் உண்மையாகும் சூழல் தமிழகத்தில் வெகு தூரத்தில் இல்லையோ என்ற ஒரு வித அச்ச ரேகையை படரச் செய்கிறதவல்லவா?
விழித்துக்கொள்வோம்...
- பசுமை நாயகன்.
- பசுமை நாயகன்.