நியாயவிலைக் கடைகளின் நோக்கம், உயர்ந்ததாக இருந்தாலும், அது இயங்கும் விதம் அவ்வாறு இருக்கிறதா? குறிப்பாக அரசு வழங்கும் இலவச அரிசி, பயனாளிகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? அடித்தட்டு மக்கள் இந்த நியாயவிலைக்கடைகளை எந்தளவு சார்ந்திருக்கிறார்கள்? நியாயவிலைக் கடைகள் குறித்த அவர்களின் பார்வை என்ன?
இது குறித்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடம் கருத்தைக் கேட்டறிந்தது புதிய தலைமுறை.
சந்தை விலையை விட நியாயவிலைக் கடைகளில் பொருட்களின் விலை குறைவு என்பதாலும், அடித்தட்டு மக்களுக்கு அரசு இலவச அரிசி வழங்குவதாலும் தமிழகம் முழுவதும் இந்தக் கடைகளின் முக்கியத்துவம் முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளது.
அரசு வழங்கும் இலவச அரசியைக் கொண்டுதான் வாழ்க்கையை நகர்த்துகிறோம் என்று கூறிய தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் நியாயவிலைக்கடைகளின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இலவச அரிசியை எளிதாகப் பெற முடியாத நிலை உள்ளதாக வருந்துகின்றனர் எளிய மக்கள்.
நியாயவிலைக்கடைகளில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு முறை செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், இதனால், கூலி வேலைக்குச் சென்று பொருள் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள தங்களுக்கு பெருத்த சிரமம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர் மக்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் மட்டுமல்ல கிருஷ்ணகிரியிலும் இதே நிலைதான் என்கின்றனர் அந்த மாவட்ட மக்கள்.
ஒசூர் அருகேயுள்ள டைட்டன் டவுன்ஷிப்பில் குடியிருக்கும் மக்கள், தங்கள் பகுதியில் நியாயவிலைக் கடை இல்லாததால், 3 கிலோ மீட்டர் தூரம் சென்று அங்குள்ள நியாயவிலைக் கடையில் பொருட்களை வாங்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
திறக்கப்படாத ரேஷ்கடை: இத்தனைக்கும் தங்கள் பகுதியில் பகுதிநேர நியாயவிலைக்கடைக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி திறந்து வைக்க இருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதால், கடந்த 6 மாத காலமாக அந்தக்கடை திறக்கப்படாமல் உள்ளதாகவும் கூறுகின்றனர் டைட்டன் டவுன்ஷிப் குடியிருப்புவாசிகள்.
பலகோடி மக்கள் பயன்பெறுவதற்காக உருவாக்கப்பட்ட நியாய விலைத் திட்டம் நியாயமாக நடைபெற்றால் மக்கள் பயனடைவர். அரசு இதனை கவனத்தில் கொண்டு செயல்படுமா?!