விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த மாவட்டங்களில் குடிநீருக்காக மக்கள் படும் அவதி வார்த்தையில் அடங்காதது.
விருதுநகர், கந்தக பூமி என்றழைக்கப்படும் இந்த மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களைவிட மழையளவு குறைவாகவே இருந்து வருகிறது. பெரியார் தவிர மற்ற நீர்த்தேக்கங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் கிராமப்புறங்களில் குடிநீர்ப் பிரச்னை தலை விரித்தாடுகிறது. குறிப்பாக அருப்புக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில் மணிக்கணக்கில் குடிநீருக்காக காத்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. ரோசல்பட்டி என்ற கிராமத்தில், மாதம் ஒருமுறை விநியோகப்படும் தண்ணீரும் உப்பு நீராக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின்மூலம் கிடைக்கும் தண்ணீர் போதிய அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டையும் விருதுநகர் மாவட்ட மக்களால் முன்வைக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தின் நீர் ஆதாரமாக கருதப்படும் குளங்கள், ஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. குடிநீருக்காக மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் கால்கடுக்க அலைந்து திரிகின்றனர். காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்தும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்கிறார்கள் மக்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையால் மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. உப்பு நீரை அதிகம் கொண்ட இங்கு, குடிநீருக்காக மக்கள் தவித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறுகள் பல இருந்தும் நிலத்தடி நீர் மட்டம் உயரவே இல்லை. குடிநீர்த் தட்டுப்பாடு அந்த மாவட்ட மக்களை வதைத்து வருகிறது. மழைக்காலங்களில் ஆற்று நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க, அணைக்களை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வானம் பார்த்த பூமிகளாகவே கருதப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த மாவட்டங்களில் மழை அளவு குறைந்து வருவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தண்ணீருக்கு ஏங்கும் இந்த மக்களின் தாகம் தீருமா? அரசு இவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணுமா?