மனிதர்களிடம் மருந்து சோதனையில் ஈடுபடும் சோதனைக் கூடங்களின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பதை அறிய முயன்றது புதியதலைமுறை, அதற்காக நமது செய்திக் குழு அந்நிறுவனங்கள் மேற்கொள்ளும் சோதனைகளை ரகசியமாக கண்காணித்தது. அந்த ரகசிய புலனாய்வில், மருத்துவ பரிசோதனைகளுக்கான எந்த நெறிமுறைகளும் அங்கு பின்பற்றப்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சட்டப்படி பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல் லோட்டஸ் லேப்பில் மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன என்பதை உறுதி செய்வதற்காக, ரகசியக் கேமராக்களுடன் நமது செய்திக் குழுவினர் லோட்டஸ லேப் மேற்கொள்ளும் மருந்து சோதனைக்கான பரிசோதனையில் கலந்துகொண்டனர். 19 முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் அதிக அளவில் அங்கு வந்திருந்தனர். ஒவ்வொருவரைப் பற்றிய விவரங்களை குறிப்பெடுத்த பின் அமர வைக்கப்பட்டனர்.
இறுதியாக அந்த பரிசோதனைக்கூடத்தின் பிரதிநிதி ஒவ்வொருவரையும் அழைத்து, மேற்கொள்ள உள்ள சோதனை குறித்து தெரிவிக்கத் தொடங்கினார். அப்படி அவர் பேசுவதை நாம் ரகசியமாக பதிவு செய்தோம். சோதனை செய்யவுள்ள மருந்தைப் பற்றியோ, அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியோ ஏதுவும் கூறவில்லை மாறாக எவ்வளவு ரத்தம் எடுக்கப்படும் எனவும் அதற்காக எவ்வளவு பணம் கொடுக்ப்படும் என்பதைத்தான் அந்த பிரதிநிதி தெரிவித்தார்.
மருத்துவ பரிசோதனைகளில் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் பின்பற்றாதது குறித்தும், பணம் கொடுத்து ஏழை எளிய மாணவர்களையும் இளைஞர்களையும் இதில் ஈடுபடுத்துவது குறித்தும் விளக்கம் பெற லோட்டஸ் லேப் நிர்வாகத்தை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் நம்மைச் சந்திக்க மறுத்துவிட்டனர். பின் மின்னஞ்சல் வாயிலாக அவர்களிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம். ஆனால் சுமார் ஒருமாதம் பொறுத்திருந்த பின்னும் அவர்களிடம் இருந்து நமக்கு பதில் வரவில்லை. பின் மீண்டும் ஒரு முறை நேரடியாக அவர்களைச் சந்திக்க முயன்று அந்த நிகழ்வையும் ஒளிபதிவு செய்தனர் நமது செய்திக் குழுவினர்.
நம்மை உள்ளே அனுமதிக்காமல் வெளியிலேயே அமரச் சொல்லிவிட்டு அந்த பரிசோதனைக்கூடத்தின் மேலாளர் கனேஷ்பிரபு மற்றும் மருத்துவர் சுந்தரவடிவேல் ஆகிய இருவரும் வெளியே வந்து நம்மிடம் பேசினர். அவர்களிடம் நாம் முன்வைத்த எந்தககேள்விக்கும் அவர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். அங்கு மருத்துவ சோதனைகள் நடைபெறுகிறதா என்பதைக்கூட தெரிவிக்க மறுத்துவிட்டனர். நாம் அவர்கள் தரப்பு விளக்கங்களை பதிவு செய்ய பல முறை முயற்சி செய்தும் அவர்கள் பதில் தர மறுத்துவிட்டனர்.
நிர்வாகிகளின் முரண்பாடான பேச்சும், பரிசோதனைக் கூடத்தின் முன் பெயர் பலகை இல்லாததும் இங்கு சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை உறுதிபடுத்தும்படியாகவே உள்ளது. இதுபோலவே தாம்பரம் சேலையூரில் உள்ள மைக்ரோ தெரஃபிக் ரிசர்ச் லேப் என்ற சோதனைக் கூடத்திலும் சட்டவிதிகளுக்கு மாறாக இதுபோன்ற சோதனைகள் நடைபெறுவதாக கூறுகிறார் இந்த நிறுவனம் மேற்கொண்ட சோதனையில் பங்கேற்ற கல்லூரி மாணவர். இதுபோல தமிழகம் முழுவதும் பல சோதனைக்கூடங்கள் ரகசியமாக, மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தி வருகின்றன. சர்வாதிகாரி ஹிட்லரின் சிறைக் கொட்டடியில் மருந்து சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட யூதர்கள் தாங்கள் எதிரிகளின் கையில் சிக்கியிருக்கிறோம் என்பதை அறிந்திருந்தனர். ஆனால் அப்பாவித் தமிழர்களோ தாங்கள் சோதனை எலிகளாக ஆக்கப்படுகிறோம் என்பதை அறியாமலே அந்தச் சோதனைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.