நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் அமல் படுத்தப்படாததினால், நாளுக்கு நாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன.இதற்கான காரணங்கள் என்ன?
நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமை. அவர்கள் அதனை செய்யத் தவறினால் இதுகுறித்து மீண்டும் நீதிமன்றத்திலே முறையீடு செய்வது வழக்கம்.
இதுபோன்று தொடரப்படும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் கடந்த 1981 ஆம் ஆண்டில் 107 ஆக இருந்தது. பின்னர் கடந்த 2000ஆம் ஆண்டில் 807 ஆகவும், 2011-ல் ஆயிரத்து 893 ஆகவும் அதிகரித்தது. நீதிமன்ற உத்தரவுகளை அமல் படுத்துவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் நிலையில், தற்போது ஒரேநாளில் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கலாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நேரில் ஆஜராகும்படி உயர் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிடுவது வழக்கம். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகும் அதிகாரிகள், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளிப்பார்கள். அதனால், அந்த வழக்குகுள் முடிவுக்கு வரும்.
ஆனால் தற்போதைய நிலையில் அதிகாரிகளை நீதிமன்ற உத்தரவுகளை அமல் படுத்துவதில் காலதாமதம் செய்வதால், வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 1400 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இது போன்ற அவமதிப்பு வழக்குகள், நீதிமன்றத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை சரியாக அமல் படுத்தாத காரணத்தால் தான் அதிகரித்து வருகின்றன. எனவே நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்கும் முன்னதாக அரசு அதிகாரிகளை அவருடைய உத்தரவை அமல் படுத்தும் விதம் குறித்து இதற்கான கமிட்டி ஒன்றை அமைத்து அதன் மூலம் உத்தரவுகளை நிறைவேற்றினால் மட்டும் இந்த வழக்கு எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.