கோவை அருகே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், வனவிலங்குகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாக இருக்கிறது. இதுதொடர்பாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை மாவட்டம் எட்டிமடை வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள், பறவைகள் உள்ளன. இந்நிலையில், அங்கு பறவைகளைப் படம்பிடிக்கச் சென்ற சூற்றுச்சூழல் ஆர்வலர்கள், இரும்புக்கம்பியால் ஆன நூற்றுக்கணக்கான சுருக்குப் பொறிகள் வனப்பகுதியில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். முயல், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடவே இந்த சுருக்குகள் வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
எட்டிமடை வனப்பகுதி முழுவதும் பல இடங்களில் விலங்குகளை வேட்டையாட இதேபோன்ற சுருக்குப் பொறிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்கு வன விலங்குகளை வேட்டையாடுவது தொடர்ந்து நடைபெறுவதாக கூறிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்த விவகாரத்தில் வனத்துறை முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டது புதிய தலைமுறை. ஆனால் பணியாளர் பற்றாக்குறை காரணமாக வன வேட்டையை தடுப்பதில் சிரமம் உள்ளதாகவும், சுருக்கு வைத்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.