லடாக் பகுதியில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள முடியாது என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய அரசு விடுத்த கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது. இரு நாடுகள் இடையே பரஸ்பரம் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படியே சீன ராணுவம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில்தான் தங்கள் நாட்டு ராணுவம் ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக கூறுவது சரியல்ல என்றும் சீன வெளியுறவுத் துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.
இதனிடையே, பிரச்னை தீவிரமானால் கூடுதல் படைகளை அங்கு நிறுத்த இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 400க்கும் அதிகமான முறை, இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவியதாகவும், இந்தாண்டில் இதுவரை சுமார் 100 முறை எல்லை தாண்டியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1987ல் சும்டோரோங் சூ பகுதியில் சீன அத்துமீறலால் போர் மூளும் நிலை ஏற்பட்டு தணிந்த பின்னர் தற்போதுதான் முதன்முறையாக சீன படைகள் இந்திய எல்லையில் இருந்து வெளியேற மறுக்கின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி தெரிவித்துள்ளார்.